அக்.15; முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தினம் – இளைஞர் எழுச்சி தினம்

kalam2

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்.15, இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

‘ஏவுகணை நாயகன்’, ‘மக்கள் ஜனாதிபதி’  என அன்போடு அழைக்கபட்டு வந்த  அப்துல் கலாம், 1931 அக்.,15ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலாம் தனது கடின உழைப்பால் இந்தியா மட்டுமல்ல உலகின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக உயர்ந்தார்.

துவக்க கல்வி படிக்கும் போது, படிப்புச் செலவுக்கு பத்திரிகை விநியோகம் செய்தார். பள்ளிப்படிப்பை முடித்தவுடன், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில் 1954ல் இயற்பியல் பட்டம் பெற்றார். 1960ல் ‘மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ (எம்.ஐ.டி.,)யில், ‘ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்’ பட்டம் பெற்றார்.

‘பைலட்’ ஆக வேண்டுமென்பது தான் முதலில் இவரது கனவாக இருந்தது. பின் இவரது திசை மாறியது.

டி.ஆர்.டி.ஒ., வில் ‘ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாபிலிஷ்மென்ட்’ தலைமை விஞ்ஞானியாக, பணியில் சேர்ந்தார்.

இந்திய ராணுவத்திற்கு சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைப்பதே அவரின் பணி. 1969ல் இஸ்ரோவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு, இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எஸ்.எல்.வி., ராக்கெட் மூலமாக ‘ரோகிணி 1’ செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இந்த வெற்றியில் கலாம் முக்கிய பங்கு வகித்தார். அதே ஆண்டில், புராஜெக்ட் டெவில், வேலியண்ட் என்ற இரண்டு செயற்கைக் கோள்களும் கலாமின் முயற்சியால், எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

தொடர்ந்து அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார்.

ஜூலை 1992 முதல், டிச., 1999 வரை மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்தார். இந்த காலகட்டத்தில் தான், ‘பொக்ரான் -2’ அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்தியாவை அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இடம்பெறச் செய்தார். நாட்டின் உயர்மட்ட அணு விஞ்ஞானி எனும் அளவிற்கு உயர்ந்தார்.

1997ல் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாம், 2002 ஜூலை 25ல் பதவியேற்றார்.

சிறப்பாக பணியாற்றிய இவர் ‘மக்கள் ஜனாதிபதி’ என்று நாடு முழுவதும் அழைக்கப்பட்டார்.

மாணவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்ட இவர், தன் வாழ்நாளில் லட்சக்கணக்கான மாணவர்களை நேரடியாக சந்தித்து, சிறந்த எதிர்கால சந்ததியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

மாணவர்களை ‘கனவு காணுங்கள்’ என அறிவுறுத்தினார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், சென்னை அண்ணா பல்கலை., ஆமதாபாத் ஐ.ஐ.எம்., , இந்துார் -ஐ.ஐ.எம்., , மைசூர் பல்கலை., மற்றும் ஆராய்ச்சி மையங்களில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.

நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

2015 ஜூலை 27ல் அவர் மரணிக்கும் போது கூட, மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்தார்.

2020ல் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்பது அவரது கனவு.

அவரது கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் கலாமின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.