“அடுத்து நாங்கதான்.. தொலைச்சுபுடுவோம்!” மக்களை மிரட்டிய அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

 edappadi palanisamy 200

 

ஜலகண்டாபுரம்: இடைப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓட்டு கேட்க சென்றபோது கிராம மக்கள் எதிர்ப்பு  தெரிவித்தார்கள். உடனே அமைச்சர், “ரொம்ப ஆடாதீங்க.  அடுத்து  ஆட்சிக்கு வரப்போவது நாங்கதான். தொலைச்சிடுவோம்’’ என்று மிரட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அடுத்த, சூரப்பள்ளியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், இடைப்பாடி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி,  வாக்கு கேட்டு மக்களை சந்தித்தார்.

 கடைக்காரன்வலவு பகுதியில் அமைச்சரை சூழ்ந்துகொண்ட பொதுமக்கள்சூரப்பள்ளி  பேருந்து நிலையம்  கடைக்காரன் வலவு வரையிலும் உள்ள தார்சாலை, கடந்த பத்து  ஆண்டுகளாக சீர் செய்யப்படவில்லை.  குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்துக்கள் நடக்கிறது. இது குறித்து பல முறை புகார் அளித்தும்  நடவடிக்கை எடுக்காத நீங்கள், தற்போது ஓட்டு கேட்டு வருகிறீர்களே..” என்று  கேட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் பழனிச்சாமி பதில் கூற முடியாமல் நின்றார். மக்கள் தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டனர். இதனால் ஆவேசமடைந்த அமைச்சர் பழனிச்சாமி,  ஒலிபெருக்கியை அணைக்காமலேயே, “ரெம்ப ஆடாதீங்க. அடுத்ததும் நாங்கதான் ஆட்சிக்கு வருவோம்.  தொலைச்சிபுடுவோம்என்று ஆவேசமாக கூறினார்.

அமைச்சரின்  ஆவேசத்தைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.  இதற்கிடையில் அமைச்சரை கேள்வி கேட்ட தனபால் என்பவரை, அமைச்சருடன் வந்தவர்கள் தாக்க முற்பட்டனர்.  அவரை, காவல்துறையினர் தனியாக அழைத்துச் சென்று காப்பாற்றினர்.

அடுத்து அமைச்சர் பழனிச்சாமி, “நீங்க எங்களுக்கு ஓட்டே போட வேண்டாம்” என்று கோபத்துடன் கூறிவிட்டு குப்பம்பட்டி கிராமத்துக்கு கிளம்பினார்.

அங்கு அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கிமாம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்திருந்தனர். இதனால் அங்கு ஓட்டு கேட்காமல் திரும்பிச் சென்றார் பழனிச்சாமி.