அதிசயம் : மூளை அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இளைஞர்

பெங்களூரு

மூளை அறுவை சிகிச்சையின் போது சரியான நரம்பைக் கண்டுபிடிக்க கிட்டார் வாசித்து மருத்துவர்களுக்கு ஒரு நோயாளி உதவினார்.

பெங்களூருவை சேர்ந்த இசைக்கலைஞர் துஷார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இவர் கிட்டார் வாசிப்பதில் சிறந்து விளங்கினார். இவர் கிட்டார் வாசிக்கும் போது இடது கையில் மூன்று விரல்கள் மட்டும் திடீர் திடிர் என நடுங்கி இவரால் வாசிக்க முடியாமல் போனது.  ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இது ஆரம்பித்தது.  நாளடைவில் கிட்டார் வாசிக்க ஆரம்பித்தாலே விரல்களில் நடுக்கம் வந்தது.

அவர் இதற்காக மருத்துவமனையை அணுகினார்.  இவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையின் சில நரம்புகளின் தவறான செயல்பாட்டினால் தான் இந்த நடுக்கம் ஏற்படுகிறது என கண்டறிந்தனர்.  இந்த நடுக்கத்தை சரி செய்ய அந்தக் குறிப்பிட்ட நரம்புகளைக் கண்டறிந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்கள்.  இந்த அறுவை சிகிச்சை அசாதாரணமானது எனவும் கூறப்பட்டது.

அறுவைச் சிகிச்சையின் போது நோயாளின் மண்டை ஓட்டில் 14 மிமீ துளை இடப்பட்டது,  அவருக்கு வலி தெரியாத மருந்து கொடுக்கப்பட்டிருந்ததால் அவரால் வலியை உணர முடியவில்லை.  பின் மருத்துவர்கள் அவரை கிட்டார் வாசிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.  அவரும் வாசித்தார்.  அப்போது மூளையில் எந்த நரம்புகளால் இந்த நடுக்கம் உண்டாகிறது என்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அந்தக் குறையை சரி செய்தனர்.

தற்போது துஷார் முழு ஆரோக்யத்துடன் உள்ளார். அவரது விரல்கள் முழுமையாக குணமடைந்து இப்போது தொடர்ந்து அவரால் கிட்டார் வாசிக்க முடிகிறது எனக் கூறப்படுகிறது.  அவரது இந்த மாற்றத்தை அவரால் அறுவைசிகிச்சை செய்யும் போதே உணர முடிந்தது என்றும், மூன்றே நாட்களில் அவர நடக்கத் துவங்கி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்