CB15_FAST_GKJBOQIF_2737569f
 
த்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதாக நேற்று சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, ஒன்பது நாட்களாக நடந்துவந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக தகவல் பரவியது. ஆனால், “தமிழக அரசின் அறிவிப்பு  கண்துடைப்பே. திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அரசிதழில் ஆணை வெளியிட்டு, நிதி ஒதுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்று போராட்ட குழு தெரிவித்துள்ளது.
அவினாசி– அத்திக்கடவு நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அவினாசி புதிய பஸ் நிலையம் எதிரில் 14 பேரும், கைகாட்டி மற்றும் பெருமாநல்லூரில் தலா 15 பேரும், அன்னூரில் 13 பேரும் என மொத்தம் 54 பேர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள்.   இத்திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை ஆகும்.
போராட்டக்காரர்களுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் என அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
முக்கிய கட்சிகளின் தலைவர்கள் உண்ணாவிரத பந்தலுக்கு  வந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், பொதுமக்களும்  தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று தெரிவித்தனர்.    அதன்படி கடந்த திங்கட் கிழமை குழந்தைகளுக்கு பள்ளி சீருடைகளை அணிவித்து பள்ளிக்கு அழைத்து செல்லாமல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு திருப்பூர் கலெக்டர் ஜெயந்தியை சந்தித்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர். அவர்களுக்கு கலெக்டர் அளித்த பதில் திருப்தி அளிக்காததால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கும்மி அடித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பாடல்கள் பாடினார்கள். .
தொடர்ந்து குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, அரசின் இலவச பொருட்களை ஒப்படைக்க முயன்றனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறும்போது “இந்த திட்டம் நிறைவேறும் வரை சமரச பேச்சுக்கே இடமில்லை” என்றனர்.
பிறகு, அங்கிருந்து தங்களது குழந்தைகளுடன் உண்ணாவிரத பந்தலுக்கு சென்றனர். தகவலறிந்து கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ராஜன் உள்ளிட்டோர் உண்ணாவிரத பந்தலுக்கு சென்றனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் பந்தலுக்குள் அனுமதிக்காமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள், “அத்திக்கடவு திட்டம் அரசு பரிசீலனையில் உள்ளது.  விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். எனவே நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள்” என்றார்கள்.
அதற்கு போராட்டக்காரர்கள் அவினாசி–அத்திக்கடவு திட்டத்தை அரசிதழில் வெளியிடும் வரை சமாதானத்துக்கே இடமில்லை என்று கூறி பேச்சுவார்த்தைக்கு மறுத்தனர்.
இந்த நிலையில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் மிகவும் சோர்வடைந்ததால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் பந்தலுக்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள், “நாங்கள் எவ்வித சிகிச்சையும் எடுத்துக்கொள்ள மாட்டோம். திட்டத்தை நிறைவேற்றிய பிறகு வாருங்கள்” என்று கூறி திருப்பி அனுப்பினர்.
இந்த நிலையில் நேற்று காலையும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. தொடர்ந்து பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட குவிந்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும் பொதுமக்கள், “அவினாசி – அத்திக்கடவு திட்டத்தால் பயனடையும் பகுதிகளான அவினாசி, பெருந்துறை, காங்கயம் உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மக்கள், பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப மாட்டார்கள்” என்றனர்.
இந்த நிலையில், நேற்று சட்டசபையில், “அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவேற்றப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த அறிவிப்பை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. “அரசின் அறிவிப்பு கண்துடைப்பாக உள்ளது. எங்கள் போராட்டம் தொடரும்” என்று அறிவித்துள்ளனர்.

பழ. ரகுபதி
பழ. ரகுபதி

இது குறித்து போராட்டக்குழுவைச் சேர்ந்த பழ. ரகுபதியிடம் பேசினோம். அவர், “சட்டமன்றக் கூட்டத் தொடரில், பெயரளவிலான, கண்துடைப்பான அறிவிப்பாக தமிழக அரசு, பொத்தம் பொதுவாக இத்திட்டம் தொடங்கப்படும் என்றும், மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாகவும் கூறி இருக்கிறது.  இது ஏமாற்று அறிவிப்பாகும். இதை போராட்டக்குழு ஏற்கவில்லை.
திட்டத்தைத் தொடங்கும் அறிவிப்பை அரசிதழில் வெளியிடுவதும், அதற்கான நிதியை ஒதுக்கிப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதுதான் போராட்டக் குழுவின் கோரிக்கை. அது நடக்கும் வரை போராட்டம் தொடரும்.
சிலர் , போராட்டம் கைவிடப்பட்டதாக  வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். உண்ணாவிரதப் பந்தலில் இருந்து செய்தி வரும்வரை வதந்திகளை நம்பாமல் ஆதவளிப்போம்” என்று தெரிவித்தார்.