அனுமனை விடமாட்டாங்க போல….! உ.பி. பாஜ அமைச்சர் மீண்டும் ஒரு சர்ச்சை

லக்னோ:

உ.பி. மாநிலத்தில் அனுமன் சாமியை வைத்து அரசியல் செய்து வரும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உ.பி. முதல் யோகி தொடங்கி வைத்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

தற்போது ‘அனுமன் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்’ உ.பி அமைச்சர் ஒருவர் கூறி உள்ளார். இதன் காரணமாக அனுமன் சர்ச்சை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள இந்து மக்கள் மற்றும் அனுமன் பக்தர்களிடையே கடும் கோப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அனுமன் ஜாட் சமூகத்தை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என உ.பி. மாநில இந்து சமயநிலைத்துறை அமைச்சர் லஷ்மி நாராயண் சவுத்ரி தெரிவித்து உள்ளார்.

பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றதில் இருந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அவ்வப்போது சர்ச்சைகள் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய முதல்வர் யோகி, அனுமன் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறி சர்ச்சையை தொடங்கி வைத்தார்.

யோகியின் கருத்துக்கு நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சமீபத்தில், உ.பி. மாநில சட்டமன்ற  மேலவை உறுப்பினர்  நவாப் என்பவர் அனுமன் இஸ்லாமியர் என்று கூறி கொளுத்திப் போட்டார்.

இந்த சர்ச்சை ஓயாத நிலையில், யோகி அமைச்சரவையை சேர்ந்த  அமைச்சரான லஷ்மி நாராயண் சவுத்ரி, ‘ஹனுமன் ஒரு ஜாட் எனக் கருதுகிறேன் என்று கூறி உள்ளார்.

இதற்கு காரணமாக அவர் கூறியுள்ள கருத்து நகைப்பை ஏற்படுத்துகிறது. ஒருவருக்கு ஆபத்து என அறிந்ததும் , முதல்நபராக அவருக்கு உதவி செய்யும் குணம் உடையவர்கள் ஜாட் சமூகத்தினர் தான் என்றும், அதுபோலவே அனுமனும் உடனடியாக உதவும் குணம் கொண்டவர். எனவே அவர் ஜாட் இனத்தை சேர்ந்தவராகத்தான் இருக்கும் என்று கூறி உள்ளார். அதனால்தான், சீதை ராவணனால் சீதை கடத்தப்பட்டவுடன் ராமரை பின்தொடர்ந்து அவர் உதவ முன்வந்தார்.’ என்றும் கூறி உள்ளார்.

மேலும், ‘சனாதன தர்மத்தை பின்பற்றும் அனைவரும் கண்டிப்பாக அனுமனை வணங்குவார்கள். இதன் மீது எங்கள் முதல்வர் யோகிஜி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். ஒருவருடைய செயல்பாடுகளை வைத்தே அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதை அறிய முடியும்.’ எனக் கருத்து கூறி உள்ளார்.

உ.பி. தலைவர்ளின் அனுமன் குறித்த ஆய்வுக்கருத்துகள்’ மக்களிடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.