அமெரிக்கா: கடிகாரம் தயாரித்த முஸ்லிம் சிறுவன் கைது!

1

சாமா பின் லாடனிலிருந்து ஐசிஸ் வரை ஜிஹாதிஸ்டுகள் நடத்தியிருக்கும், இன்னமும் நடத்திவரும் அட்டகாசங்கள், பயங்கரவாதச் செயல்கள் ஓர் அப்பாவி மாணவனைப் பெரும் அவலத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

கைரேகை பதியப்பட்டு, விலங்கிடப்பட்டு, துருவித் துருவி விசாரிக்கப்பட்டு, இறுதியில் வீட்டிற்கனுப்பப்பட்டிருக்கிறான். அமெரிக்காவே கொந்தளிக்கிறது.

இப்போது ஒரு வழியாக பிரச்சினையிலிருந்து மீண்டு விட்டான்.

பெயர் அஹமது மொஹ்ம்மது. பெயரே சிக்கல். வசிப்பதோ அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இர்விங் என்ற நகரில். போதாக்குறைக்கு அவனாக ஒரு கடிகாரம், ஆம் பாட்டரி பொருத்தப்பட்ட சாதாரண எலெக்ட்ரானிக் கடிகாரம் ஒன்றை உருவாக்கி பள்ளிக்குக் கொண்டு செல்கிறான். ஒன்பதாம் வகுப்பு பயிலும் அவன்.

அவனது பொறியியல் ஆசிரியர்,  ”நன்றாக இருக்கிறது, ஆனால் யாரிடமும் காட்டாதே என்று அறிவுறுத்தி அனுப்புகிறார்

பெயர் அஹமது மொஹம்மது. கையில் இருப்பதோ விநோதமான கருவி. அதில் ஏதும் பாம் என்று எவரேனும் நினைத்தால்? அவர் அச்சப்பட்டதுபோலவே நடந்தது.

தன் கண்டுபிடிப்பை யாரிடமும் காண்பிக்கமுடியாமல் பைக்குள் திணித்துக்கொண்டு தன் வகுப்பிற்குச் சென்றான் அஹமது.

ஆனால் அவன் போதாத காலம் ஆங்கில வகுப்பின்போது திடீரென்று அந்த கடிகாரத்திலிருந்து பீப், பீப் ஒலி தொடர்ந்து வருகிறது.  ஆசிரியை.  என்ன அது என்ன அது என பதைபதைக்கிறார்.

”ஒன்றுமில்லை மிஸ் புதியவகை டிஜிட்டல் கடிகாரம்,” என்று எடுத்துக் காண்பித்து சமாதானப்படுத்துகிறான் . “ஐயோ இல்லையே அது ஏதோ டைம் பாம் மாதிரி அல்லவா இருக்கிறது,”  என்று ஆசிரியை அலறுகிறார். ”இல்லை மிஸ், கடிகாரம்தான் நானே உருவாக்கியது,” என்று அழுத்திச் சொல்கிறான்.

பதைபதைப்பு அடங்காமல், மிஸ் நேரே பள்ளி முதல்வரிடம் போய் விஷயத்தைச் சொல்லுகிறார். அவருக்கும் கவலை, பதட்டம் தொற்றிக்கொள்கிறது. மீண்டும் விசாரணை, அஹமது அதே பதிலைச் சொல்லுகிறான்  மேலும் விளக்கமாக.

2

பள்ளி நிர்வாகம் நம்பவில்லை. பிரித்துக்காட்டுகிறான். ஊஹூம். வேறெதோ இது பயங்கர ஆயுதம், இது வேறு செப்டம்பர் மாதம், 2001 நவம்பர் 9 ஆம் நாளன்றுதானே இரட்டை கோபுரம் தகர்ப்பு. அவன் பிறந்ததும் அதே ஆண்டில்தான்!

பதினான்காவது ஆண்டு நிறைவுக்கு அஹமது முஹம்மது ஏதோ திட்டமிட்டிருக்கிறானோ, அல் காய்டா, ஐசிஸ்சை சேர்ந்தவனோ…என்னென்னவோ பயங்கர கற்பனைகள். போலீசார் அழைக்கப்படுகின்றனர்.

ஏதோ ஒரு வடிவேலு படத்தில், யாருகிட்டேயும் சொல்லாதே என்று மட்டும் சொல்லி விட்டு ஒருவர் ஆற்றில் மூழ்கி மறைய, வடிவேலுவை போலீசார், என்ன சொன்னான் அந்த ஆள், என்ன சொன்னான், சொல்லு சொல்லு, என்று கெஞ்சி, மிரட்ட, அவர் என்ன செய்வார், பாவம், ”யாரிடமும் சொல்லாதே என்றுதான் சார் சொன்னான்,” என்பதை மீண்டும் மீண்டும் முதலிலிருந்து சொல்வார்.

ஏதோ கிண்டல் செய்கிறார், மறைக்கிறார் என நினைத்து அவரை அள்ளிக்கொண்டுபோவார்கள். அதே கதைதான் அஹமதுவுக்கும் நேர்ந்தது.

அதில் இன்னமும் கொடுமை அவனுக்கு விலங்கிட்டு பள்ளியிலிருந்து அழைத்துச் சென்று ஒரு தடுப்புக் காவல் நிலையத்தில் வைத்து, ஐந்து போலீஸ் அதிகாரிகள் அவனைச் சுற்றி நின்று  பல மணி நேரங்கள் விசாரித்ததுதான். அந்த நேரம் தனது பெற்றோரைக் கூடத் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

பயங்கரவாதியைப் போல்தான் விசாரித்திருக்கின்றனர். கையில் விலங்கிட்டு என்னை அழைத்துச் சென்று, அவ்வாறு என்னை அவர்கள் சுற்றி நின்று துருவித் துருவி விசாரித்த போது அவமானமாக இருந்தது. நான் மனிதன் இல்லையோ, ஏதோ பெரும் குற்றவாளியோ என்ற சந்தேகமே வந்துவிட்டது என்கிறான் அச்சிறுவன் மனம் நொந்து

அதே கேள்விகள். அதே பதில்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை போலீசாருக்கு. இறுதியில் அவனது ரேகையைப் பதிவு செய்துவிட்டு வீட்டுக்கனுப்புகின்றனர். போலி வெடிகுண்டை பள்ளிக்கு எடுத்து வந்தான் என்று வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மூன்று நாட்கள் பள்ளியிலிருந்து விலக்கிவைக்கப்படுகிறான்.

அவனது தந்தை சூடானிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர். தன் மகனுக்கு ரொபாட்டில் எல்லாம் ரொம்ப ஆர்வம், சூட்டிகையான பையன், அஹமது என்று பெயரிருந்ததால் இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே எனப் புலம்புகிறார்.

ஆனால் ஒரு நல்ல திருப்பம் என்னவெனில் விஷயம் ட்விட்டரில் வெடிக்க, பலதரப்பிலிருந்தும் இர்விங் போலீசாருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் கடும் கண்டனங்கள், அஹமதிற்கு ஆதரவு.

நாங்கள் அஹமது மொஹம்மதின் பக்கம் நிற்கிறோம்   #IStandWithAhmed  எனும் ஹாஷ்டாக்குடனான ட்வீட்டுகள் வெள்ளமாய் பெருக்கெடுத்தோடியது.

அதிபர் ஒபாமாவே, தம்பி, வாப்பா வெள்ளை மாளிகைக்கு நான் அந்தக் கடிகாரத்தைப் பார்க்கவேண்டும் என்று ட்வீட் செய்தார்.

இப்போது வழக்கிலிருந்தும் விடுபட்டுவிட்டான் அஹமது.  ஆனால் ரணம் ஆற, வடுக்கள் மறைய பல ஆண்டுகளாகும்.

முஸ்லீம்கள் இரண்டாந்தர, மூன்றாந்தர பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர், அவர்கள் ஒவ்வொருவரையும் சந்தேகத்துடனேயே அமெரிக்க போலீசும் சரி, நீதித் துறையும் சரி பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு மீண்டும் வலுப்பெற்றிருக்கிறது.

உலகமெங்கும் முஸ்லீம்கள் கொதித்துப் போயிருக்கின்றனர். நடப்பது எதுவும் நல்லதற்கே இல்லை என வருந்துகின்றனர் நோக்கர்கள்.

– த.நா.கோபாலன்

1 thought on “அமெரிக்கா: கடிகாரம் தயாரித்த முஸ்லிம் சிறுவன் கைது!

  1. when u say related posts, they should indeed be related…i think till the site acquires enuf material to display related reports, this feature can be frozen. some big picture relating to the post itself can be shown there if the space has to be filled up

Leave a Reply

Your email address will not be published.