us-culture

 

 

அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பொன்றில் சுவையானதொரு நிகழ்வு. டொனால்ட் ட்ரம்ப், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருப்பவர், பெரும் பணக்காரர். தடாலடிப் பேர்வழி. கோபம் வந்தால் செய்தியாளர்களை சகட்டு மேனிக்கு ஏசுவார்.

நேற்று அவருக்கும் ஸ்பானிஷ் டிவி செய்தியாளருக்கும் இடையில் கடும் வாக்குவாதம். லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பவர்கள் அவரவர் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்பது ட்ரம்பின் வாதம். அவரைக் கிடுக்கிப்பிடி போட ஸ்பானிஷ் நிருபர் ஒருவர் முயல்கிறார்.

“அவசரப்படாதீங்க. உங்க முறை வரும்போது கேளுங்கள்” என்கிறார் ட்ரம்ப். ஆனால் நிருபர், விடாப்பிடியாய் கேள்வி கேட்க முயல, ட்ரம்ப் அவரை வெளியேறச் சொல்லுகிறார்.

அப்புறம்தான் இருக்கிறது சுவையான திருப்பம்! மற்ற பத்திரிகையாளர்கள் அந்த ஸ்பேனிஷ் நிருபருக்காக வாதாடுகின்றனர்.

“எனக்கொன்றும் பிரச்சினை இல்லை. அவர் வரட்டுமே..நன்றாகக் கேட்கட்டுமே..பொறுமையாயிருங்க என்றுதானே சொன்னேன்” என்று ட்ரம்ப் சொல்ல.. ஸ்பானிஷ் டிவி நிருபர் மீண்டும் வரவழைக்கப்படுகிறார். விட்ட இடத்திலிருந்து கேள்விகளைத் தொடர்கிறார்.

இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு விசயம்…. பெரும் தனவந்தராயிருந்தும், கோபக்காரராயிருந்தும் தன் தவறை உணர்ந்து ட்ரம்ப்பால் திருப்பி அழைக்கமுடிகிறது. அந்த நிருபரும் வருகிறார். வாக்குவாதம் தொடர்கிறது.

இத்தகைய பண்பாடு – நாகரிகம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் காண்பதரிது. இடக்கு மடக்காகக் கேள்வி கேட்டால் ஒன்று எரிந்து விழுவார்கள் அல்லது நாம் மிரட்டப்படுவோம்.

பரிதாபத்திற்குரிய ஜெயா டிவி நிருபர்கள் போன்று நிர்வாகம் சொல்லிக்கொடுத்தபடி கேள்வி கேட்கவேண்டிய நிலையும் இங்கு உண்டு என்பதையும் சொல்லியாக வேண்டும்.

நம் ஜனநாயகம் முதிர்ச்சி அடைய வெகுநாளாகும் என நினைக்கிறேன்.