7e71d742-4b29-40fc-9849-7ea0c822eac2_S_secvpf

 

திருச்சி:

அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீட்டை முற்றுகையிட ஆலோசனை நடத்திய, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு உட்பட, ஐந்து பேர் திருச்சியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபையில் வேளாண் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் வைத்தியலிங்கம், “தமிழகத்தில் வறட்சி இல்லை’ என்று கூறினார்.

இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  திருச்சியில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், அனைத்து விவசாய சங்கத்தினரும் வாயில் கறுப்பு துணி கட்டி அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், அமைச்சர் வைத்தியலிங்கம்  வீட்டை முற்றுகையிடவும் விவசாயிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், மண்ணச்சநல்லூர் வனத்தாயி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு இந்த ஆலோசனை கூட்டம்  நடந்தது.

மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆலோசனை வழங்கினார்.

இந்த தகவல் அறிந்து ஜீயபுரம் டி.எஸ்.பி., கென்னடி தலைமையில் வந்த காவல்துறையினர்  கூட்டத்தை கலைக்குமாறு கூறினார்கள்.

இதனால் காவல்துறையினருக்கும், விவசாய சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அய்யாக்கண்ணு, மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், துணை தலைவர் கருப்பையா பிள்ளை, மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் சதாசிவம், ஒன்றிய துணை தலைவர் வெங்கடேசன் ஆகிய, 5 பேரை, திருச்சி-கரூர் பைபாஸ் ரோட்டில், அண்ணாமலை நகரில் உள்ள, அய்யாக்கண்ணு வீட்டிற்கு காவல்துறையினர் கொண்டு சென்றார்கள். அங்கு  அவர்களை  பேரையம் வீட்டுக்காவலில் வைத்தார்கள். ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் கபிலன் தலைமையிலான போலீஸார் வீட்டைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாய சங்க நிர்வாகிகளை  தொடர்ந்து வீட்டுக்காவலில் வைத்துள்ள சம்பவம் விவசாயிகள், மத்தியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.