அரசியலில் கூட்டணி மட்டுமின்றி நட்பும் முக்கியம் : விஜயகாந்த் குறித்து பியூஷ் கோயல்

சென்னை

விஜயகாந்த் சந்திப்புக்கு பிறகு அரசியலில் கூட்டணி மட்டுமின்றி நட்பும் முக்கியமாகும் என மத்திய பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் சூடு பிடித்துள்ளன. இன்று அதிமுக  பாமக மற்றும் பாஜகவுடனான கூட்டணி முடிவை அறிவித்தது. பாஜகவுக்கு 5 தொகுதிகளும் பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் அளிக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளன.

அத்துடன் அதிமுக போட்டியிட உள்ள 21 இடங்களிலும் பாஜக மற்றும் பாமக கட்சிகள் ஆதரவை தெரிவித்துள்ளன.

சென்னையில் அமைந்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற பாஜக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூட்டணி குறித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. அவருட்ன் பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மற்றும் பல பாஜக நிர்வாகிகள் சென்றுள்ளனர்.

தேமுதிக சார்பில் விஜயகாந்த், அவர் மனைவி பிரேமலதா, மற்றும் அவருடைய மைத்ஹ்டுனர் சுதீஷ் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ள்தால் சுமுக முடிவு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. பேச்சு வார்த்தை முடிந்த பிறகு அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பியூஷ் கோயல், “விஜயகாந்த் சிகிச்சைக்கு பிறகு நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அவர் நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலம் பெற்று வாழ பிரார்த்திக்கிறோம். நானும் விஜயகாந்தும் பழைய நண்பர்கள். நான் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா சார்பில் விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன்

விஜயகாந்த் மோடியின் நடவடிக்கைகளை பெரிதும் பராட்டி உள்ளார். எங்களைப் பொறுத்த வரையில் அரசியலில் கூட்டணியை விட நட்பு முக்கியமாகும்” என தெரிவித்துள்ளார்.