அ.தி.மு.க. அரசின் குறைகளை மக்களிடம் எடுத்துக்கூறுவேன்: சரத்குமார் (சிரிக்காம படிங்க..!)

கோப்பு படம்
கோப்பு படம்

 

சென்னை:

“எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அ.தி.மு.க. அரசின் குறைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்பேன்” என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

“தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு மக்கள் நலன் குறித்த திட்டங்களில் சரிவர செயல்படவில்லை. அதனால் வரும் தேர்தலில் அக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.

நானும், அந்த அரசின் குறைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்பேன்” என்று சரத்குமார் கூறியுள்ளார்.

பல்வேறு எதிர்மறை சூழ்நிலைகளிலும் அ.தி.மு.க. அரசை   எதிர்க்காதவர்கள்கூட, கடந்த டிசம்பர் மாத மழை வெள்ளத்தின் போது அ.தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தார்கள்.  முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளாமல்  செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதையும், இதனால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட பிறகு சரிவர நிவாரண நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சித்தார்கள்.

ஆனால் அப்போதுகூட, “அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது” என்று செல்லுமிடமெல்லாம் பேசி வந்தார் சரத்குமார்.  சட்டசபையில் வைத்து சரத்குமாரை, ஜெயலலிதா குறை கூறிய பிறகும் அ.தி.மு.க.வை தொடர்ந்து ஆதரித்துவந்தார்.

ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருந்தும் கிடைக்காத நிலையிலும், மிகச் சமீபம் வரை ஜெயலலிதாவை புகழ்ந்தே வந்தார் சரத்குமார்.

ஆனால் வரும் தேர்தலில் சரத்குமாருக்கு அ.தி.மு.க கூட்டணியில் இடமில்லை என்று தெரிந்த பிறகு, பா.ஜ.கவுடன் கூட்டணி என்றார்.

அ.தி.மு.க. ஆட்சியை நான்கு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் வரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து வந்த சரத்குமார், இப்போது அக் கட்சியின் குறைய மக்களிடம் எடுத்துக்கூறுவேன் என்கிறார்.

தற்போது அவர் வகித்து வரும் எம்.எல்.ஏ. பதவி என்பது, அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.