அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போது?

admk w1

சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை:

அ.தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிக்க பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவினர் பல்வேறு தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கையில் என் னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமைக்கு பரிந்துரை செய்திருந்தனர். அதன் அடிப்படையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனைப்படி அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதில் தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்– அமைச்சர் ஜெயலலிதா இடம் பெறச் செய்துள்ளார்.

மதுவிலக்கை படிப்படியாக அமுல்படுத்துவது எப்படி என்பது பற்றியும் தேர்தல் அறிக்கையில் விரிவாக இடம் பெறுகிறது. கடந்த 2011 தேர்தல் அறிக்கையில் மிக்ஸி, பேன், கிரைண்டர், ஏழை விவசாயிகளுக்கு இலவச ஆடு, மாடு, மாணவர்களுக்கு ‘லேப்டாப்’ உள்ளிட்ட பல்வேறு இலவச அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதேபோல் இந்த தேர்தல் அறிக்கையிலும் ஏதாவது ஒரு முக்கிய அறிவிப்பு இடம் பெறலாம் என தெரிகிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள் அதிகம் இடம் பெறாத நிலையில், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்னென்ன அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.