ஆசிய பெண்கள் கபடி போட்டி: 3 புள்ளியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டது இந்திய அணி

ஜகர்தா:

ந்தோனேசியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான கபடி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை தவற விட்டது இதன் காரணமாக வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றும் என பெரும் எதிர்ப்பார்ப்புடன் இருந்த நிலையில், ஈரானுடன் நடைபெற்ற இறுதி போட்டியில், 27-24 என்ற பாயிண்ட் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஜகர்தாவில் உள்ள இன்டோர் ஸ்டேடியத்தில் கபடி போட்டி நடைபெற்றது.

இன்று நடைபெற்ற பெண்கள் கபடியின் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இடைவேளையின்போது, இந்திய 13 பாயிண்டும், ஈரான் 11 பாயிண்டு பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து விறுவிறுப்பாக ஆட்டம் நடைபெற்றது. அடுத்த அரை மணி நேரமே இருந்த நிலையில் இரு தரப்பினரும் விடாப்பிடியாக ஆடி வந்தனர்.

இந்திய வீராங்கனைகள் சோனாலி, சசி குமாரி, கவிதா ஆகியோர் ஈரான் அணியிடம் தொடர்ந்து பிடிபட்ட நிலையில், ஆட்டத்தின் போக்கு மாறியது.  இருந்தாலும் ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும்போது இந்திய அணி 3 பாயிண்டுகளை பெற்று விறுவிறுப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் இந்திய அணியினர் தொடர்ந்து பாயிண்டுகளை எடுத்து வந்த நிலையிலும் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் ஈரான் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது.

இதன் காரணமாக இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என 24 பதக்கங்களை பெற்று  பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

ஏற்கனவே   ஆண்கள் கபடி பிரிவில், இந்திய அணி ஈரானுடனான அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தது. பதக்க வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.