04-1446657314-nithayanantha-600

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பால்சாமி மடத்திற்குள் நுழைந்த நித்தியானந்தாவின் சீடர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டினர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் பகுதியில் பால்சாமி என்பவர் பெரும் பிரசித்தி பெற்றவராக விளங்கினார். இவரை பால்சாசமி சித்தர் என்று மக்கள் அழைத்தார்கள். இவர், தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் மடம் அமைத்து நிர்வகித்து வந்தார். இவர் மறைந்த பிறகு துருவர் சித்தர் என்பவர் நிர்வகித்து வருகிறார்.

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட ஒன்பது சீடர்கள், பால்சாமி மடத்துக்குள் நுழைந்து, அங்குள்ளவர்களை விரட்ட முற்பட்டிருக்கிறார்கள். மடம் தங்களுக்குச் சொந்தமானது என்றும் கூறியிருக்கிறார்கள்.

இதனால் ஆசிரம நிர்வாகிகளுக்கும் நித்தியானந்தா சீடர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து மடத்துக்கு பொது மக்கள் வந்தார்கள். அப்போது பொது மக்களையும் நித்தியானந்தா சீடர்கள் விரட்ட முற்பட்டனர். இதனால் இருதரப்புக்கும் வார்த்தைகள் தடித்தது. ஒரு கட்டத்தில் கைகலப்பானது. மக்கள் ஆவேசமாக தாக்கவே, நித்தியானந்தாவின் சீடர்கள் ஓட ஆரம்பித்தனர். தெருவில் ஓடிய அவர்களை துரத்திச் சென்று மக்கள் தாக்கினர்.

இந்த தகவலை அறிந்த போலீசார் நித்தி சீடர்களை தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து  துருவர் சித்தரை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “பால்சாமி சித்தர் பல்வேறு சித்துவிளையாட்டுகள் மூலம் மக்களுக்கு நன்மைகள் செய்தவர். அவரது மறைவுக்குப் பிறகு நான் மடத்தை நிர்வகித்து வருகிறேன். சட்டப்படியான உரிமை எங்களுக்கே இருக்கிறது.  அது இந்தப் பகுதி மக்களுக்கும் தெரியும்.  சிறிது நாட்களுக்கு முன்பு நித்தியானந்தாவின் சார்பில் வந்த சிலர், எனக்கு பணம் பொருள் தருவதாகவும் மடத்தை தங்களுக்கு விட்டுத்தரும்படியும் கூறினார்கள். எனக்கு காசு பணம் தேவையில்லை, மக்கள் சேவையே முக்கியம் என்று அவர்களை திருப்பி அனுப்பிவிட்டேன்.  இந்த நிலையில் நேற்று ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்து எங்களை வெளியேறச் சொன்னார்கள். மறுத்ததும் தாக்கினார்கள். இந்த விசயம் அறிந்த வந்த பொதுமக்களையும் தாக்கினார்கள். ஆவேசமடைந்த மக்களும் திருப்பித் தாக்க, ஓடிவிட்டார்கள்” என்றார்.

பல வித சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்கும் நித்தியானந்தாவின் சீடர்கள் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.