ஆட்சிக்கு வந்தால் ஊழல் சொத்துகளை பறிமுதல்! :  வைகோ

1

மாமண்டூர்: மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வரப்படும்.  ஊழல் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்” என்று  மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக மாநாட்டில் வைகோ பேசியதாவது:

“தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. தமிழக விளைநிலங்கள் தரிசுநிலங்களாகிவிட்டன. ஸ்பெக்ட்ரம் ஊழல் பணப்பரிவர்த்தனையில் ஸ்டாலின் பலன் பெற்றார். ஆனால்  ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பலிகடாவாக்கப்பட்டார் கனிமொழி.

அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம். மாணவர்களின் கல்விக் கடன்களை அரசே ஏற்கும். தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

மதுவிலக்கு என ஜெயலலிதாவும் கருணாநிதியும் சொல்வது ஊரை ஏமாற்றும் விசயம்.  ஆனால் நாங்கள் உண்மையிலேயே  மதுவிலக்கு கொண்டு வருவோம். பீகாரில் நிதிஷ்குமார் செய்ததைப் போல நாங்கள் மதுவிலக்கை அமல்படுத்துவோம்” என்றார்.

மேலும் அவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவோம். கர்நாடகாவை மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்.  தமிழகத்தில் கூடங்குளம் அணு உலைகள் அகற்றப்படும். மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் அடித்து விரட்டப்படும். இலங்கை அகதிகளுக்கு தமிழகத்தில் வாழ்வு இல்லாத நிலை இருக்கிறது. இதனை மாற்றியமைப்போம்” என்று பேசினார் வைகோ.