ஆந்திரா அமைச்சர்கள் மீது எம்எல்ஏ பகீர் புகார்

ஐதராபாத்:

தெலங்கானா மாநில தெலுங்கு தேச கட்சியின் செயல் தலைவரும், கோடாங்கல் தொகுதி எம்எல்ஏ.வுமான ரேவநாத் ரெட்டி தனது கட்சியை சேர்ந்த ஆந்திரா அமைச்சர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

‘‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முன்பு, அமைச்சர்கள் கைகட்டி தலைவணங்கி வரவேற்பு கொடுப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சியை எதிர்ப்பதில் தவறில்லை’’ என்று ரேவநாத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஆந்திரா மாநிலம் அனந்தப்பூர் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்த சந்திரசேகர ராவுக்கு ஆந்திரா தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு என்ன தேவை இருக்கிறது. தெலங்கானாவில் தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் கைது செய்யப்படும் நிலையில் சந்திரசேர ராவுக்கு தலை வணங்கி வரவேற்பு அளிப்பது ஏன்?’’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘‘இதே ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு ஐதராபாத் சென்றபோது இது போன்ற ஒரு வரவேற்பு அளிக்கப்படவில்லை. தெலங்கானா அமைச்சர்கள் யாரும் அவரை வரவேற்கவும் இல்லை. வாழ்த்தவும் வரவில்லை’’ என்று ரேவநாத் என்றார்.

டில்லி சென்று விட்டு திரும்பிய ரேவநாத் ரெட்டி செய்தியாளர்களிடம் இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார். மேலும், அவர் டில்லியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து இணைப்புக்கு ஒப்புதல் பெற்றுவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘‘ ஆந்திரா நிதியமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான யானமாலா ராமகிருஷ்ணுடு தொலங்கானாவில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்த பணியை பெற்றுள்ளார். அதனால் சந்திரசேகர ராவுக்கு எதிராக நிதியமைச்சர் ஒரு வார்த்தை கூடி பேச மறுக்கிறார்.

பரிதாலா சுனிதாவின் மகன் மற்றும் தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏ பய்யாவுலா கேசவின் மருமகன் ஆகியோர் இணைந்து மதுபான தொழிற்சாலையை தொடங்கி, பீர் தயாரிக்க தெலங்கானா அரசிடம் உரிமம் பெற்றது எப்படி?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘‘தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு சேதம் இணைந்து பல பேராராட்டங்களை நடத்தி வருகிறது. சிங்கரேனி தொழிற்சங்க தேர்தல் மற்றும் தெலங்கானா அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து காங்கிஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இதை நாங்கள் தொடர்வோம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.