ஆன்லைன் விளம்பரங்களில் நடித்த கோலி, தமன்னாவை கைது செய்ய வேண்டும்: ஹைகோர்ட்டில் வழக்கு

சென்னை: ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: நேரடி சூதாட்டங்களுக்கு தடை உள்ள நிலையில், தற்போது இணையதளங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள் அதிகரித்து வருவதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கோலி, தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்களை தயாரித்து இளைஞர்களை மூளை சலவை செய்கிறார். வட்டிக்கு கடன் வாங்கி, அதை திருப்பி கட்ட முடியாத சூழல் ஏற்பட்டு, இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

எனவே இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்,விளம்பரத்தில் நடித்த விராட் கோலி, தமன்னா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை அவசர வழக்காக இன்றே விசாரிக்க மனுதாரர் கோரிக்கை விடுக்க வரும் 4ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.