ஆர் எஸ் எஸ் தலைவரின் இட ஒதுக்கீடு விமர்சனம் : பாஜகவுக்கு பிரச்சினை

டில்லி

ர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் அளித்த இட ஒதுக்கீடு குறித்த விமர்சனத்தால் பாஜகவுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

டில்லியில் நடந்த ஞானோத்சவ் என்னும் நிகழ்வில் பாஜக தலைவர்  மோகன் பகவத் கலந்துக் கொண்டார். கடந்த ஞாயிறு அன்று இந்த நிகழ்வின் இறுதி நாளன்று அவர் தனது உரையில், “இட ஒதுக்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளிப்போர் மற்றும் எதிர்ப்போர் ஆகிய இரு தரப்பினரும் இந்த பேச்சு வார்த்தையில் கலந்துக் கொண்டு இனி இட ஒதுக்கீடு தேவையா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். அவர் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாக நாடெங்கும் எதிர்ப்புக் குரல் எழுந்தது.

இதை ஒட்டி மற்ற ஆர் எஸ் எஸ் தலைவர்கள் மோகன் பகவத் இந்த பிரச்சினையின் தீவிரம் அறிந்தவர் எனவும் அவரது பேச்சை ஊடகங்கள் தவறாகப் புரிந்துக் கொண்டதாகவும் விவரித்திருந்தனர். மேலும் இந்த சர்ச்சைகளுக்கு ஊடகங்களின் தவறான புரிதலே காரணம் என அவர்கள் தெரிவித்தனர். ஆயினும் இந்த கருத்தைப் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை, மோகன் பகவத்துக்கு நாடெங்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் அமைப்பு இவ்வாறு தெரிவித்தது பாஜகவுக்கு கடும் அசவுகரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மூன்று மாநிலங்களான அரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே இந்த மாநிலங்களில் எவ்வாறு தேர்தலை எதிர் கொள்வது  என அக்கட்சிக்குத் பிரச்சினை உண்டாகி இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 25% பழங்குடியினர் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் 50% மற்றும் தலித்துக்கள் 11% உள்ளனர். அரியானாவில் தலித்துகள் 22% பேர் உள்ளனர். இந்நிலையில் மோகன் பகவத் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியதால் பாஜக என்ன செய்வது என்னும் நிலையில் உள்ளது.