ஆர் எஸ் எஸ் துணை நிறுவனத்துக்கு பாஜக அளித்த சலுகையை ரத்து செய்த உத்தவ் தாக்கரே

மும்பை

முந்தைய மகாராஷ்டிர பாஜக அரசு ஒரு ஆர் எஸ் எஸ் துணை நிறுவனத்துக்கு அளித்திருந்த சலுகையை சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே ரத்து செய்துள்ளார்.

 

மகாராஷ்டிராவில் தற்போது பதவி ஏற்றுள்ள சிவசேனா கூட்டணி அரசு முந்தைய பாஜக பிறப்பித்துள்ள பல உத்தரவுகளை ரத்து செய்துள்ளது.   இந்த அரசு பதவி ஏற்றவுடன் முந்தைய பாஜக அரசு நந்தர்பர் பகுதியில் ஒரு சர்வதேச குதிரைச் சந்தை நடத்த குஜராத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு அளித்த ரூ.321 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.   அதன் பிறகு பொதுத் துறையில் பணி புரியும் மருத்துவர்களுக்கான மருத்துவக் கல்லூரி ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

மகாராஷ்டிர மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்பு முந்தைய பட்நாவிஸ் அரசு கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று பல திட்டங்களை அறிவித்துள்ளது.   அதில் பல திட்டங்கள் அமைச்சரவை ஒப்புதலைப் பெறாத நிலையில் இருந்தது.   அந்த திட்டங்கள் ஒவ்வொன்றையும் தற்போதைய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசு ரத்து செய்து வருகிறது.

நாக்பூரில் உள்ள ஆர் ஆர் எஃப் என்னும் ஆய்வு மையம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் துணை நிறுவனம் ஆகும்  இந்த நிறுவனம்  ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஒரு பிரிவான பாரதிய சிக்‌ஷான் மண்டல் ஆரம்பித்ததாகும்.  இந்த ஆய்வு மையம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கடோல் தாலுக்காவில் 105 ஹெக்டேர் நிலம் வாங்க இருந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம்தேதி அன்று தேவேந்திர பட்நாவிஸ் அரசு இந்த நாக்பூர் நிறுவனத்துக்கு ஸ்டாம்ப் டூட்டியில் இருந்து முழுமையாக விலக்கி சலுகை  அளித்தது.   இதற்கான ஸ்டாம்ப் டூட்டி கட்டணம் மட்டும் ரூ1.5 கோடி ஆகும்.

தற்போது இந்த உத்தரவு புதிய அமைச்சரவையின் ஒப்புதலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.  அரசின் நிதி நிலை மோசமாக உள்ளதால் தற்போது அரசுக்கு ரூ.1.5 கோடி இழப்பு சரியானதல்ல எனக் காரணம் காட்டி சிவசேனா கூட்டணி அரசு இந்த சலுகையை ரத்து செய்துள்ளது.