5b

ரு கோயில், நம்மை என்னவெல்லாம் செய்யும்? மனசுக்கு நிம்மதி தரும். திரும்ப வரணுமே என்று நினைக்க வைக்கும். கொண்டு வந்த சோக பாரங்களையெல்லாம் இறக்கி வைச்சாச்சு என்கிற சந்தோஷத்தைக் கொடுக்கும். எழுத்தாளன் எனும் வகையில், அடடா… ஒரு பிரமாதமான கோயிலைப் பத்தி எழுதப் போறோம் என்கிற பரவசத்தைத் தரும்! இவை எல்லாவற்றுக்கும் மேலே, என்னையே எனக்குக் காட்டி அருளிய திருத்தலம் என்றால்… அது திருப்பட்டூர்தான்!

திருச்சி & சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து உள்ளே கிளை பிரிந்து செல்லும் சாலையில், இருபக்கமும் உள்ள வெட்டவெளியைப் பார்த்தபடி 5 கி.மீ. பயணித்தால், திருப்பட்டூர் எனும் அற்புதமான தலத்தை அடையலாம்.

இங்கே, பிரம்மா வழிபட்ட ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரும் ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரியும் அருள்பாலிக்கிறார்கள். கொஞ்சம் தள்ளிப் போனால், ஒரு கி.மீ. தொலைவில் காசிவிஸ்வநாதரும் விசாலாட்சியும் அருளாட்சி நடத்துகிறார்கள். இங்கே, காசி விஸ்வநாதர் ஆலயத்தில், வியாக்ரபாதரின் திருச்சமாதியும் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், பதஞ்சலி முனிவரின் திருச்சமாதியும் உள்ளது என்பது கோயிலின் கூடுதல் பலத்துக்கான விஷயங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இப்படியொரு பிரம்மாவை, பிரமாண்ட வடிவில் அருள்பாலிக்கும் பிரம்மாவை, பத்ம பீடம் என்று சொல்லப்படும் தாமரை பீடத்தில் இருந்தபடி கம்பீரமாகக் காட்சி தரும் பிரம்மாவைப் பார்த்தால் பரவசமாகிவிடுவோம்.

கோஷ்டத்தில் தெரிந்தும் தெரியாதபடி இருக்கும் பிரம்மா, இங்கே தனிச்சந்நிதியில், நம்மை அறிந்தும் அறியாதவர் போல் அமர்ந்து கொண்டு, அத்தனை செயல்களையும் பார்த்தபடி இருக்கிறார்.

எதிரிப் பட்டியல் போடச் சொன்னால், எவர் எவர் பெயரையோ எழுதுவோம். ஆனால் நமக்கான முதல் எதிரி கர்வம்தான் அல்லவா. அந்த கர்வம்தான், பிரம்மாவுக்கு சத்ருவானது. அலட்டலுடன் பேசிய பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்தார் சிவபெருமான். வேலையையும் அதாவது படைப்புத் தொழிலையும் பிடுங்கிக் கொண்டார்.

கலங்கிப் போனார் பிரம்மா. கர்வம் தொலைத்தேன். மன்னியுங்கள் என்றார். அம்பாளும், பிரம்மாவை மன்னிக்கச் சொல்லி சிபாரிசு செய்தாள். அம்பாளின் அறிவுரைப்படி, 12 தலங்களில் உள்ள சிவலிங்கத் திருமேனிகளை மானசீகமாக இங்கே ஸ்தாபித்து, வழிபட்டார். சிவனாரும் சாப விமோசனம் தந்தருளினார். கூடவே பிரம்மாவிடம், ‘இந்தத் தலத்துக்கு வரும் அடியவர்களின் தலையெழுத்தை திருத்தி, நல்லவிதமாக எழுது’ என உத்தரவிட்டார். அதன்படி இன்றளவும் அங்கேயே இருந்து கொண்டு, வருவோருக்கெல்லாம் நல்லவிதமாக தலையெழுத்தை திருத்தி எழுதி அருள்கிறார் பிரம்மா.

சக்திவிகடனில் நான் உதவி பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய போது, இந்தக் கோயில் பற்றி, திருப்பட்டூர் திருத்தலம் குறித்து ஏழு அல்லது ஒன்பது அத்தியாயங்கள் ஒரு மினிதொடர் போல் எழுதுவதாகத் திட்டமிட்டு, எழுதினேன். ஆனால் நம்புவீர்களா… 47 அத்தியாயங்கள் எழுதினேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இந்தக் கோயிலோடே உறவாடினேன்.

அப்போதுதான், என்னையும் என் எழுத்தையும் எனக்கே புரிய வைத்தது. கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள், குருக்கள் அண்ணாக்கள், கடைக்காரர்கள் என அனைவரும் எழுதுவதற்கு முன்பு இருந்த பக்தர்களின் வருகையையும் இப்போது தினமும் சுமார் இரண்டாயிரம் பக்தர்களுக்கு மேல் வந்து கொண்டிருப்பதையும் சொல்லிச் சொல்லிப் பூரிப்பார்கள், எப்போதும்!

இங்கு வந்து தரிசித்தால், 12 தலங்களைத் தரிசித்த புண்ணியம். குரு பிரம்மாவின் சந்நிதியில் நின்றபடி, பிரம்மாவை தரிசிக்கலாம். அப்படியே ஞானகுரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்கலாம். கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், தூணில் உள்ள ஸ்ரீசனீஸ்வரரையும் பார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம்.

அதேபோல், பிரதோஷ தரிசனம் பெரும் புண்ணியம். சைவத்தில் சிவனாருக்கும் வைணவத்தில் ஸ்ரீநரசிம்மருக்கும் உகந்த அற்புதமான நாளில், பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ள நந்திக்கு அருகில் உள்ள தூணில், ஸ்ரீநரசிம்மரின் சிற்பத்தையும் தரிசிக்கலாம்.

முன்னோரின் ஆசியை வழங்கும் காசிவிஸ்வநாதர் ஆலயம்…, நம் தலையெழுத்தை திருத்தி, நல்லவிதமாக மாற்றி அருளும் ஸ்ரீபிரம்மா கோயில்…. இவற்றையெல்லாம் கடந்து, தோண்டத் தோண்டத் தங்கம் என்பது போல், ஒவ்வொரு முறை தரிசிக்கும் போதும் ஆச்சரியங்களும் அற்புதங்களும் கூடிக்கொண்டே போகிற மிக உன்னதமான திருத்தலம்… திருப்பட்டூர்!

வாழ்வில், உங்கள் நட்சத்திர நாளிலோ, வியாழக் கிழமையிலோ, அல்லது ஏதேனும் ஒருநாளிலோ… திருப்பட்டூர் திருத்தலத்துக்கு சென்று வாருங்கள். அதையடுத்து மிக நல்ல நல்ல திருப்பங்களை வாழ்வில் பெறுவீர்கள் என்பது சத்தியம்!

  • வி. ராம்ஜி