இங்கிலீஷ் இந்து
இங்கிலீஷ் இந்து

சென்னை: இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி விலகினார். இதையடுத்து இடைக்கால ஆசிரியராக சுரேஷ் நம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து நாளிதழ் நிர்வாக குழுவுக்கும் மாலினி பார்த்தசாரதிக்கும் இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்றுசொல்லப்படுகிறது.
தமிழகத்தில் மிக அதிகம் பேர் வாசிக்கும் ஆங்கில நாளிதழான இந்து தினமும் சராசரியாக மூன்று லட்சம் பிரதிக்கும் மேல் விற்பானை ஆகிறது. இந்த நாளிதழின் ஆசிரியராக இருந்த ரவி, கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து பிப்ரவரி 1-ந் தேதி முதல் மாலினி பார்த்தசாரதி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இந்து நாளிதழின் முதல் பெண் ஆசிரியர் இவர்தான்.
மாலினி பார்த்தசாரதி, இந்து நாளிதழின் ஆசிரியராக இருந்த கஸ்தூரி சீனிவாசனின் மகன்வழி பேத்தி ஆவார். அந்நாளிதழின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரும்கூட.
ஏற்கனவே இவர், 2011-ம் ஆண்டு சித்தார்த் வரதராஜனை இந்து ஆசிரியராக கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது நிர்வாக ஆசிரியர் பதவியை மாலினி ராஜினாமா செய்திருந்தார்.
தற்போது இந்து நாளேட்டின் மும்பை பதிப்பு செலவினங்கள் குறித்தே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தே இடைக்கால ஆசிரியராக சுரேஷ் நம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.