இணையதளத்தில் அமைச்சர்களின் சொத்து விபரங்கள் முடக்கம்…. பிரதமர் அலுவலகம் திடீர் நடவடிக்கை

PM modi

டெல்லி:
மத்திய அமைச்சர்களின் சொத்து விபரங்களை பொது மக்கள் பார்வையில் இருந்து பிரதமர் அலுவலகம் முடக்கியுள்ளது.

வெளிப்படையான நிர்வாகம் என்று மத்திய அரசு மார்தட்டிக் கொண்டு வருகிறது. இந்த வகையில் மத்திய அமைச்சர்களின் சொத்து மற்றும் கடன் விபரங்களை பிரதமர் அலுவலக இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த முறை கடந்த 2010ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. பாஜ அரசும் இந்த தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி வரை இந்த தகவல்களை புதுப்பித்து அதன் விபரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரதமர் அலுவலக இணைய தளத்தில் பொதுமக்கள் அனைவரும் இந்த தகவல்களை பார்வையிடும் வகையில் இதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தற்போது பாஸ்வேர்டு மூலம் மட்டுமை தகவல்களை அறியும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதனால், பாஸ்வேர்டு அறிந்த அதிகாரமிக்கவர்கள் மட்டுமே மத்திய அமைச்சர்களின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ள முடியும். பொதுமக்கள் அமைச்சர்கள் சொத்து விபரங்களை அறிய முடியாத வகையில் முடக்கப்பட்டுள்ளது.

மக்களின் தகவல் அறியும் உரிமை இயக்க உறுப்பினர் அஞ்சலி பரத்வாஜ் கூறுகையில்,‘‘ வெளிப்படையான நிர்வாகமும், மக்களுக்கு தகவல்களை அளிக்க தேவையில்லை என பிரதமர் முடிவு செய்துள்ளார் என எண்ணத் தோன்றுகிறது.
தலைமை தகவல் ஆணையர் பதவி கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் காலியாக உள்ளது. அதனால் அரசு மீதான புகார்களை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் அகர்வால் கூறுகையில்,‘‘ தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஸ்தம்பிக்க செய்யும் வகையில் இந்த செயல்பாடு உள்ளது. தற்போது 37 ஆயிரம் வழக்குகள் கமிஷன் முன் நிலுவையில் உள்ளது. ஊழியர்கள் பற்றாகுறை காரணமாக தகவல் அறியும் உரிமை ஆணைய பணிகள் முடங்கியுள்ளது.

மத்திய அமைச்சர்களின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை வெளியிட வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒரு மைல் கல்லாகும். இதுவும் ஓராண்டு கால சட்டப் போராட்டத்துக்கு பின்னரே சாத்தியமானது.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்களின் ஒப்புதல் அடிப்படையில் அமைச்சர்களின் சொத்துக்கள், அவரது தொழில் விபரங்கள், குடும்பத்தாரின் தொழில் விபரங்களை வெளியிடலாம் என தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற 90 நாட்களுக்குள் எம்பி.க்கள் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என விதி உள்ளது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.