இந்தியாவுக்காக மீண்டும் களத்தில் இறங்கி விளையாட இருக்கும் கபில்தேவ்

--

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மீண்டும் களமிறங்கி விளையாட உள்ளார். 24 ஆண்டுகளுக்கு பின் நாட்டுக்காக மீண்டும் விளையாட உள்ள கபில்தேவ் இந்திய அணிக்காக கோல்ப் விளயாட்டில் பங்கேற்க உள்ளார். ஜூலை மாதம் நொய்டாவில் நடைபெற்ற ஜேபி கிரீன்ஸ் கோல்ப் போட்டியில் இந்திய சீனியர் போட்டியில் விளையாடிய கபில்தேவ் இந்திய அணிகாக தேர்வு செய்யப்பட்டார்.

kapil

59வயதான கபில்தேவ் அக்டோபர் மாதம் ஜப்பானில் நடக்க இருக்கும் ஆசிய பசுபிக் சீனியர்ஸ் கோல்ப் போட்டியில் விளையாட உள்ளார். இந்த போட்டி மியாசகி நகரில் உள்ள டாம் வாட்சன் கோல்ப் கிளப்பில் நடக்க உள்ளது. பொதுவாக 55 வயதை கடந்து விட்டால் கோல்ப் விளையாட்டில் தகுதி பெறுவது கடினம். ஆனால் 59வயதை எட்டிய கபில் தேவ் தனது முயற்சியின் காரணமாக இந்திய அணையில் இடம்பெற்றுள்ளார்.

இதற்கு முன்பாக 2015ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற சீனியர் கோல்ப் போட்டியில் விளையாட தகுதி பெற்றும் கபில்தேவ் அதனை தவிர்த்து விட்டார். இம்முறை இந்திய அணிக்காக அவர் விளையாட இருப்பதால் கோல்ப் ரசிகர்களிடையே ஆர்வம் மிகுந்துள்ளது.

இது குறித்து கபில்தேவ் கூறுகையில் “ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து ரசிகர்களின் பார்வையில் இருந்தும், பொதுவெளியில் விளையாடுவதையும் தவிர்த்து வந்தேன். எனது நெருங்கிய நண்பர் ஒருவர் கோல்ப் விளையாட்டை கற்றுக் கொடுத்தார். இந்த விளையாட்டில் நான் யாரென்று யாருக்கும் தெரியாது, ரசிகர்களும் அதிகம் இருப்பதில்லை.

தவறு நேர்ந்தால் என்னை யாரும் குறை கூறப்போவதில்லை. வெற்றி ஏற்பட்டால் அது எனது கடின முயற்சியால் கிடைத்ததாகும். கோல்ப் உடல் வலிமை, உற்சாகம், சக்தி என அனைத்தையும் ஒருநிலைப்படுத்தும் விளையாட்டு. இந்த விளையாட்டு மூலம் என்னை நானே மதிப்பிட முடியும்” என்று கூறினார்.

இதற்கு முன்பாக பெங்களூரில் ஆகஸ்ட் 4 ம் தேதி நடைபெற உள்ள லூயி பிலிப் ப்ரோ-ஆம் கோல்ப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரரான ஷான் பொல்லாக் மற்றும் இலங்கைத் துடுப்பாட்ட வீரர் மகேலா ஜெயவர்தன் ஆகியோருடன் இணைந்து கபில் தேவ் விளையாட உள்ளார்.