“இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்” – நீதிபதி எஸ்.ஆர். சென் சர்ச்சைக் கருத்து

மேகாலயா:

தத்தின் அடிப்படையில் பிரிவினையாக இருந்ததால் இந்தியா ஒரு இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற மேகாலய உயர் நீதிமன்றத்தின் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான வழக்கு சமீபத்தில் மேகாலய உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர். சென்னின் தீர்ப்பு குறிப்பு சற்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த திங்கள்கிழமை அவர் வழங்கிய 37 பக்க தீர்ப்பில், இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், பார்சிஸ், காசிஸ், ஜெயின்டியாஸ் மற்றும் கரோஸ் ஆகியோர் மூன்று அண்டை நாடுகளில் இன்றும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று நீதிபதி எஸ்.ஆர்.சென் குறிப்பிட்டார்.

எனவே, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்ஸ், பௌத்தர்கள், பார்சிஸ், கிறிஸ்தவர்கள், காசிஸ், ஜெயின்டியாஸ் மற்றும் கரோஸ் ஆகியோருக்கு ‘எந்த கேள்வி அல்லது ஆவணங்கள் இல்லாமல்’ குடியுரிமை வழங்கி அமைதியான முறையில் இந்தியாவில் வாழ்வதற்கு வழிவகை செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார், நீதிபதி சென்.

மேலும், அவர்கள் எந்த நாளில் இந்தியாவிற்கு வந்திருந்தாலும் அவர்களை இந்திய குடிமக்களாக அறிவிக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் வருபவர்களும் இந்திய குடிமக்களாக கருதப்பட வேண்டும், என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் என்ற பிரிவினை இல்லாமல் இந்தியா ஒரே பெரும் நாடாக, இந்து பேரரசாக இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு நாடு பிரிவினையின்போது, லட்சக்கணக்கான இந்துக்களும், சீக்கியர்களும் கொல்லப்பட்டனர். அவர்களுடைய சொந்த நிலங்களிலிருந்து அவர்களுடைய சொத்துகளை விட்டுவிட்டு இந்தியாவுக்கு விரட்டப்பட்டனர். நாடு பிரிவினையின்போது, பாகிஸ்தான் தன்னை இஸ்லாம் நாடாக அறிவித்துக் கொண்டது. அதேபோல, இந்தியாவையும் இந்து நாடாக அறிவித்திருக்கவேண்டும்.

மாறாக, மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. ‘நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் கிடையாது. இந்திய சட்டத்தைப் பின்பற்றி இங்கே பல தலைமுறைகளாக வாழும் இஸ்லாமியர்களும் இங்கே அமைதியாக வாழ வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு மட்டுமல்லாமல், இந்தியா மற்றொரு பாகிஸ்தான் நாடாக மாறாமல் பாதுகாக்க பிரதமர் மோடியின் அரசால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக நீதிபதி சென் கூறியுள்ளார்.

இத்தகைய தீர்ப்பு சமூக ஊடகத்தில் கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளது.