இந்தியா – சீனா நட்புறவை வழிநடத்தும் அருண் ஜெட்லி

 

a1

 

நியூயார்க் : ”இந்தியா – சீனா நாடுகள் இடையிலான நல்லுறவை, பொருளாதாரம் வழிநடத்திச் செல்கிறது,” என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

அமெரிக்காவின், நியூயார்க் நகரில், ஆசியா சமூக கூட்டத்தில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி உரையாற்றினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அருண் ஜெட்லி அளித்த பதில் விவரம்: இந்தியா – சீனா நாடுகள் இடையிலான, பொருளாதார நல்லுறவு, சிறப்பான வகையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இரு நாடுகளின் நட்புறவை, பொருளாதாரமே வழிநடத்திச் செல்கிறது. இரு நாடுகளிலும், முதலீடுகள் தொடர்ச்சியாக, அதிகளவில் குவிந்து வருகின்றன. வர்த்தக ரீதியிலான பிரச்னைகள், உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகின்றன.

சீனாவில், இந்திய நிறுவனங்கள், தொழிற்சாலைகளை நிறுவி வருகின்றன. அதேபோன்று, சீன முதலீடுகள், பெரியளவில், இந்தியாவில் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும், சீனாவிலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், விமான சேவையை சிறப்பாக வழங்கி வருகின்றன. இவர்களில் எவரும், இந்தியா – சீனா நாடுகளில், விமான சேவை விரிவாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்திய பொருளாதாரம் பெரியதாக இருப்பதால், பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்வதில், நம்பிக்கை அதிகரித்துள்ளது. 1990ல் இருந்ததை ஒப்பிடுகையில், 2016ல், இந்திய பொருளாதாரம் அதிக வித்தியாசம் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.