கலவரம்
இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு நிகழ்ந்த சீக்கியர்களுக்கெதிரான கலவரம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, ராஜீவ் காந்தி ஆலமரம் விழும்போது பூமி அதிராமல் என்ன செய்யும் என்று கேட்டதாகதான் நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஒரு பெரும் கொடுமையை எப்படி ஒரு நாட்டின் பிரதமர் அலட்சியப்படுத்தியிருக்கிறார், கார் சக்கரத்தில் சிக்கி ஒரு நாய்க்குட்டி செத்தாலும் நாம் வருந்தமாட்டோமா என மோடி சொன்னதற்கும் ராஜீவின் கருத்துக்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நமக்குத் தோன்றும்.

ஆனால் ராஜீவ் என்னதான் சொன்னார் என்பது குறித்த செய்தியை நம்மில் பலர் பார்த்ததே இல்லை. இப்போது சென்னையைச் சேர்ந்த செய்தியாளர், தற்போது லண்டனில் இருப்பவர், முற்போக்கு சிந்தனையாளர் ஸ்ரீனிவாசன் ஒரு அற்புத வேலையை செய்திருக்கிறார்.

ராஜீவ் காந்தி அந்த மரம் குறித்து சொன்ன பகுதியை எப்படியோ யூ ட்யூபில் தேடிப்பிடித்து, நுணுக்கமாக ஒவ்வொரு சொல்லையும் கேட்டு, ஸ்ரீநிவாசன் ராஜீவ் சொன்னது முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என நிறுவுகிறார்.

” இந்திரா கொலைக்குப் பின்னர் இந்தியர்கள் கொதித்துப்போயிருந்தனர், துவேஷம் அவர்களைப் பிடித்து ஆட்டியது என்பது உண்மை. சில நாட்கள் ஏதோ இந்தியாவே கலகலத்துப்போய்விட்டதுபோல் வெளி உலகிற்குத் தோன்றியிருக்கும். பெரிய மரம் ஒன்று வீழும்போது பூமியில் அதிர்வுகள் ஏற்படவே செய்யும். ஆனால் அந்தக் கட்டமும் முடிவுக்கு வந்ததே, ஒற்றுமை திரும்பிவிட்டதே, அதற்கெல்லாம் மக்களாகிய நீங்களே காரணம், நாம் உண்மை ஜனநாயக நாடுதான் என்பதை உலகு புரிந்துகொண்டுவிட்டது. நாம் அவ்வளவு எளிதில் சிதிலமடைந்துவிடமாட்டோம். நாம் நாட்டை மேலும் வலிமைப்படுத்துவோம் , இந்திராவும் நேருவும் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றுவோம்,” இதுதான் ராஜீவ் காந்தியின் அந்த சர்ச்சைக்குரிய உரையின் சாரம்.

கலவரத்தை அவர் அடக்கத் தவறினார், பொறுப்பானவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை என்பதெல்லாம் வேறு, ஆனால் ராஜீவ் கலவரத்தை நியாயப்படுத்தவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்று நிரூபிக்கிறார்

ஸ்ரீநிவாசன்
த.நா.கோபாலன்