இனி ஓடிடி தளங்களுக்கும் 3 வகை தணிக்கை சான்றிதழ் அவசியம் : மத்திய அரசு

டில்லி

மேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்குத் தணிக்கை சான்றிதழ் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் திரைப்படங்களுக்கு 3 வகை தணிக்கை சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.  அவை அனைத்து வகையினரும் பார்க்கும் யு சான்றிதழ், பெற்றோர் துணையுடன் சிறுவர்கள் பார்க்கும் யு/எ சான்றிதழ் மற்றும் வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் எ சான்றிதழ் ஆகியவை ஆகும்.

சமீப காலமாக ஒடிடி தளங்களில் திரைப்படங்கள் நேரடியாக வெளியாகின்றன.  மேலும் பல வெப் தொடர்களும் இந்த தளங்களில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.  இவற்றில் ஆபாச காட்சிகளும் வன்முறை காட்சிகளும் உள்ளதாக சில ஆண்டுகளாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

ஆகவே ஓடிடியில் நேரடியாக வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்குத் தணிக்கை சான்றிதழ் முறையை அமல்படுத்த பல்வேறு தரப்பினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இதையொட்டி மத்திய அரசு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு மூன்று வகையான தணிக்கை சான்றிதழைப் பயன்படுத்த உத்தரவு இட்டுள்ளது.

அவை 12 வயதுக்கு உட்பட்டோர், 16 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர் (எ) என மூன்று வகை தணிக்கை சான்றிதழ் ஆகும்.  குறிப்பாக ஓடிடியில் நேரடியாக வெளியாகும் திரைப்படங்களுக்கு இந்த சான்றிதழ் அவசியம் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.