இன்னும் சோகம்:  அரசியலாக்கப்படும் விஷ்ணுப்ரியா தற்கொலை!

வி அரசியல்

சென்னை: 

மலூர் பொறியாளர் கோகுல்ராஜ் படுகொலையில்  விசாரனை அதிகாரியாக இருந்துவந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

“குடும்ப சிக்கலால்தான் இப்படியொரு முடிவை எடுத்தேன். எனக்கு டி.எஸ்.பியாக பணிபுரிய தகுதியில்லை” என்று அவர் கடிதம் எழுதி  வைத்திருந்ததாக காவல்துறை தகவல் வெளியிட்டது. அந்தக் கடிதத்தில் “எனது மரணத்தை கோகுல்ராஜ் வழக்கின் விசாரணையோடு தனது முடிவை தொடர்புபடுத்தி யாரும் அரசியல் செய்யவேண்டாம்” என்று குறிப்பிட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்து.

 

இந்த நிலையில், விஷ்ணுப்ரியா மரணத்தை அரசியல் மற்றும் சாதி ரீதியாக கொண்டு செல்ல சில அமைப்புகள் தயாராகிவருவது தெரிகிறது.

யுவராஜ் தலைவராக இருக்கும் தீரன் சின்னமலைகவுண்டர் பேரவை என்ற அமைப்பு,  “நேர்மையான அதிகாரி விஷ்ணுப்ரியாவுக்கு அஞ்சலி” என்று காவல் உயரதிகாரிகளைக் கண்டிக்கும் விதமாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இன்னொரு புறம் இதற்கு நேர் மாறாக இன்னொரு போஸ்டர் வலைதளங்களில் உலாவருகிறது.  “தமிழ்நாட்டு மக்கள் இயக்கம்” என்ற பெயரிட்ட அமைப்பு, “கோகுல்ராஜை கொலை செய்த யுவராஜை பிடிக்க துணிந்தார் விஷ்ணுப்ரியா. இதை உயரதிகாரிகள் சிலர் தடுத்ததோடு, விஷ்ணுப்ரியாவுக்கு டார்ச்சர் கொடுத்தார்கள்.  அதனால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார்” என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறது.

மேலும், கொலை குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் இருப்பிடம் தெரிந்த பிறகும் வடமாநிலங்களில்  விஷ்ணுப்ரியாவை மேலதிகாரிகள் அலைய விட்டதாகவும் தகவல் கிடைத்ததாக இந்த அமைப்பினர் கூறுகிறார்கள்.

“காவல் அதிகாரியாக ஆகவேண்டும். மக்களுக்கு உதவ வேண்டும் என்ற லட்சியத்துடன் குரூப் 1 தேர்வு எழுதி இத்துறைக்கு வந்தவர் விஷ்ணுப்ரியா. அவரது மரணத்தை அரசியலாக்காமல், உண்மையை கண்டறிவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி” என்று கண்ணீருடன் சொல்கிறார்கள் விஷ்ணுப்ரியாவின் குடும்பத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.