ECI
சென்னை:
இந்திய தேர்தல் ஆணையர்கள் தமிழகம், புதுச்சேரியில் இன்று, நாளையும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் மே மாத இறுதிக்குள் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சயிதி, தேர்தல் ஆணையர்கள் ஜோதி, ரவாத் ஆகியோர் இன்று முதல் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர்.
இன்று அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை மற்றும் காவல் துறை, அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்கின்றனர்.
நாளை சென்னையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. முன்னதாக கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநிலங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட தேவைப்படும் மத்திய பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்படுகிறது.