இரண்டு கட்சியுடன் பேச்சு வார்த்தை – 38 தொகுதிகளில் போட்டி : டிடிவி தினகரன்

சேலம்

மமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமது கட்சி 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக இரண்டாக உடைந்த போது அதில் ஒரு பகுதியான டிடிவி தினகரன் அணி அம்மா மக்கள் முன்னேற்ற கழகமாக இயங்க தொடங்கியது. இந்த கட்சியின் துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் ஆர் கே நகரில் தனித்து போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். இந்த தேர்தலில் அதிமுகவை தவிர மற்ற வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர்.

தினகரன் தற்போது சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “தங்கள் மீதே நம்பிக்கை இல்லாத கட்சிகள் தமிழகத்தில் மற்றொரு கட்சியின் பின்னே அலைகின்றனர். இரட்டை இலை சின்னம் இருந்தும் அதிமுக கட்சி ஜெயலலிதாவின் தொகுதியில் வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு வெற்றி பெற்ற அமமுகவின் மீதான பயத்தில் அதிமுக பல கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயல்கிறது.

நாங்கள் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் போட்டியிட உத்தேசித்துள்ளோம். அனைத்து தொகுதிகளிலும் அமமுக மாபெரும் வெற்றி பெறும். நாங்கள் அதிமுக சொல்வதை போல் தேர்தலை புறக்கணிக்கப் போவதில்லை. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு முடிந்து விட்டது. எங்களுடன் கூட்டணி அமைக்க இரு கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை வைக்க தேமுதிக தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்ட பாமக தலைவர் எதிர்த்தார். இவர்களுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்? அமமுக வை பொறுத்தவரை பாமக மற்றும் தேமுதிக உடன் எப்போதும் கூட்டணி அமைக்காது” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 38 தொகுதிகளில் போட்டி, AMMK, Contest in 38 consttuecies, TTV Dinakaran, அமமுக, டிடிவி தினகரன்
-=-