இரும்பை அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

இரும்பை அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்
சிவாய நம என்றிருப்பவர்களுக்கு அபாயம் ஒரு நாளுமில்லை என்பது தமிழ் சித்தாந்தம் ஆகும். எந்நேரமும் சிவ சிந்தனையிலேயே இருப்பவர்களைத் தான் சித்தர்கள் என்பார்கள். அப்படிப்பட்ட தமிழ் சித்தர்கள் பரம்பரையில் வந்தவர் தான் “கடுவெளி சித்தர்”. இந்த சித்தர் தங்கியிருந்த இரும்பை எனும் ஊரில் இருக்கும் “அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்” பற்றியும், அக்கோயிலில் கடுவெளி சித்தர் புரிந்த அற்புதத்தைப் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இரும்பை மகாகாளேஸ்வரரர் திருக்கோயில். சோழ மன்னர்கள் காலத்தில் நன்கு சீரமைத்துக் கட்டப்பட்ட கோயில் இது. இந்த கோயிலின் இறைவனான சிவபெருமானின் மூலவர் லிங்கம் மகாகாளேஸ்வரர் என்றும், உற்சவர் திருமேனி சந்திரசேகரர் என்றும் அழைக்கப்படுகிறது. அம்பாள் குயில்மொழி நாயகி, மதுரை சுந்தர நாயகி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். புராண காலத்தில் இந்த ஊர் திருஇரும்பைமாகாளம் என அழைக்கப்பட்டது.
“இரும்பன், இரும்பாசுரன்” ஆகிய இரண்டு அசுரர்களை மகாகாளி வடிவெடுத்து வதம் புரிந்த பார்வதி தேவிக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் விலக இந்த தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்ட போது அந்த தோஷம் நீங்கியது. மேலும் மகாகாளர் என்கிற முனிவர் இக்கோயிலின் லிங்கத்தை ஸ்தாபித்தவர் என்பதால் அவரின் பெயராலேயே மகாகாளேஸ்வர் என்று இக்கோயிலின் இறைவன் அழைக்கப்படுகிறார்.
முற்காலத்தில் இவ்வூரில் தங்கி தவம் புரிந்து வந்த “கடுவெளி” சித்தரின் கடுந்தவத்தின் ஆற்றல் காரணமாக இவ்வூரில் மழைபொழிவு ஏற்படவில்லை என கருதிய மக்கள், ஒரு நடன மாதுவை ஏற்பாடு செய்து அவர் முன்னே நடனமாடி அவரது தவத்தைக் கலைக்கச் செய்தனர். கடுவெளி சித்தர் கண் திறந்து பார்த்த போது, அந்நாட்டின் மன்னன் சித்தரின் தவம் கலைந்தால் மழைப்பொழிவு ஏற்படும் என்கிற நல்லெண்ணத்திலேயே அவரது தவத்தை தாங்கள் கலைக்கச் செய்ததாகக் கூறி மன்னிப்பு கேட்டார்.
இதனால் மனமிறங்கிய கடுவெளி சித்தர் அவ்வூரிலேயே தங்கி சிவபணி செய்து வந்த போது நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டு, பஞ்சம் நீங்கியது. இதனால் மகிழ்ந்த மக்கள் அனைவரும் சிவன் கோயிலுக்கு விழா எடுத்து ஊர்வலமாகச் சென்ற போது, அந்த நாட்டிய பெண் நடமாடிக்கொண்டு செல்கையில், அவள் காலிலிருந்த சிலம்பு ஒன்று கழன்று விழ, அதை உடனடியாக எடுத்து அந்த நடன பெண்ணின் காலில் மாட்டினார் கடுவெளி சித்தர். இதனைக் கண்ட அனைவரும் சித்தரைப் பற்றி தவறாகப் பேச ஆரம்பித்தனர்.
இதனால் வேதனையும், கோபமும் அடைந்த கடுவெளி சித்தர் ஒரு பதிகம் பாட இக்கோயிலின் சிவலிங்கம் மூன்றாக வெடித்துச் சிதறியது. இதைக் கண்டு அதிர்ந்த மக்களும் மன்னனும் அவரிடம் வேண்ட, அவர்களை மன்னித்த கடுவெளி சித்தர் மீண்டும் ஒரு பதிகம் பாட உடைந்த சிவலிங்கம் மீண்டும் ஒன்றாகியது.
மகாகாளேஸ்வரர் கோயில் சிறப்புக்கள்
இங்கு அரசமரத்திற்கடியில் தவம் செய்த கடுவெளி சித்தரின் தவத்தை அந்த மரத்தின் கிளையில் குயில் வடிவில் இருந்து அம்பாள் கண்காணித்து வந்ததாகவும், சித்தரின் தவத்தைப் பற்றிச் சிவ பெருமானிடம் அம்பாள் கூறி வந்ததால் “குயில் மொழி நாயகி” என்ற பெயர் அம்பாளுக்கு ஏற்பட்டது. இக்கோயிலில் அம்பாள் தெற்கு திசை பார்த்தவாறு தனி சன்னிதியில் அம்பாள் மகாலட்சுமியின் கோலத்தில் காட்சி தருகிறாள்.
இக்கோயிலின் மேற்கு பிரகாரத்தில் சந்திரன் மேற்கு திசை பார்த்தபடி சகலகலா சந்திரனாகக் காட்சி தருகின்றார். இவருக்குப் பால் சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபடுபவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவதாகக் கூறப்படுகிறது. நவகிரக நாயகர்கள் அனைவரும் தங்கள் மனைவியருடன் காட்சி தருகின்றனர். சூரிய பகவான் தாமரை மலர் மீது அமர்ந்து “உஷா, பிரதியுஷா” ஆகிய இரு மனைவியரையும் தனது மடி மீது அமர்த்தியிருக்கும் சூரியனின் அதிசய கோலமாக இக்கோயிலில் காணப்படுகிறது.
பேச்சு சரியாக வராதவர்கள், இசைக் கலைகளைப் பயில்பவர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோர் அம்பாளுக்குத் தேன் அபிஷேகம் செய்து, அந்த தேனின் சில துளிகளை தங்கள் நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இதனால் தங்களின் குரல் வளம் மற்றும் இசை திறன் மேம்படுவதாகப் பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர். ஆயுள் விருத்தி ஏற்படவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொண்ட போதும் தங்களுக்குத் துன்பம் ஏற்பட்டதாக நினைப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அவர்களின் கோரிக்கைகளும், விருப்பங்களும் நிறைவேறும்.
கோயில் அமைவிடம்
அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் இரும்பை என்கிற ஊரில் அமைந்துள்ளது. இவ்வூருக்குச் செல்ல விழுப்புரத்திலிருந்தும், புதுவை மாநிலத்திலிருந்தும் போக்குவரத்து வசதிகள் அதிகம் உள்ளன.
கோயில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும். மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும்.
கோயில் முகவரி
அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில்
இரும்பை
விழுப்புரம் மாவட்டம் – 605 010