உடன்பிறப்புக்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்: ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்

சென்னை:

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராகி வருகிறது.  திமுக தொண்டர்கள் யாரும் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 5 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள திமுக தலைவர் கருணாநிதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராகி வருவதாக மருத்துவமனை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், கருணாநிதியை காண திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இருந்து அலைஅலையாக காவேரிமருத்துவமனை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதற்கிடையில் தீவிர திமுக தொண்டர்கள் ஒருசிலர் மனவேதனை காரணமாக தற்கொலையும் செய்து வருகின்றனர். இதுவரை 21 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுக செயல்தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு உருக்கமானவேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில்,  திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது.  காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலிவுற்ற அதிர்ச்சியால் 21 திமுக தொண்டர்கள் உயிரிழந்தது துயரம் அளிக்கிறது; திமுக தொண்டர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். “தலைவா வா” என்று தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் வீண்போகவில்லை என கூறி உள்ளார்.