புதுடெல்லி:

உத்திரப் பிரதேச தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி கலைத்தது.


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கிழக்கு உத்திரப்பிரதேச தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தியும், மேற்கு உத்திரப் பிரதேச பொறுப்பாளர்களாக ஜ்யோதிராதித்யா சிந்தியாவும் நியமிக்கப்பட்டனர்.

பிரியங்கா காந்தி வருகைக்கு பிறகு உத்திரப் பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது.

பிரியங்காவும் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டார். எனினும், அங்கு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில், இரு பொறுப்பாளர்களும் மாநில காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து, தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் குழுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி திங்களன்று கலைத்தது.

இதனையடுத்து, இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 2 நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் அஜய் குமார் லல்லு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கிழக்கு உத்திரப்பிரதேச கட்சி அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, மேற்கு உத்திரப்பிரதேச பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்ட பின், அங்கு கட்சி அமைப்பில் மாற்றம் கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

பிரியங்கா காந்தி மற்றும் ஜ்யோதிராதித்யா சிந்தியா ஆகியோரின் நிலை அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேபோல், கர்நாடக மாநிலத்திலும் மாநில காங்கிரஸ் கமிட்டியை அகில இந்திய காங்கிரஸ் கலைத்தது.

எனினும், மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் செயல் தலைவர் ஈஸ்வர் காண்ட்ரே ஆகியோர் பதவியில் தொடர்கின்றனர்.