உபேர் டாக்சி ஓட்டுனர்களுக்கு நிர்வாகம் புதிய கட்டுப்பாடு…

டில்லி

பேர் டாக்சி நிறுவனம், வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்லும் முன் ஓட்டுனர்கள் ஒரு செல்ஃபியை நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும் என புதிய கட்டுப்பாடு விதியை கொண்டு வந்துள்ளது.

உபேர் டாக்சி நிறுவனம் இந்தியா முழுவதும் தங்களின் சேவையை செய்து வருகிறது.  பல வாடகைக்கார் உரிமையாளர்கள் தங்கள் கார்களை உபேர் நிறுவனத்துக்காக ஓட்டி வருகின்றனர்.  அப்படி ஓடும் கார்களின் ஓட்டுனர்கள் விவரங்கள் உபேர் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது நிறுவனத்தின் விதிகளில் ஒன்றாகும்.

ஆனால் உரிமையாளர்களில் சிலர் புதிய ஓட்டுனர்களை பணியில் அமர்த்துவதால் அவர்களைப் பற்றிய விவரங்கள் உபேர் நிறுவனத்துக்கு தெரிவதில்லை.   பயணிகளை பொறுத்தவரை அவர்கள் உபேர் நிறுவனத்தின் ஓட்டுனர்கள் எனத்தான் கருதுகின்றனர்.  எனவே ஓட்டுனரின் மேல் குறை இருப்பின் பயணிகள் தங்கள் புகார்களை உபேர் நிறுவனத்துக்கு அளித்து வருகின்றனர்.  பல நேரங்களில் அந்த ஓட்டுனர்கள் யார் என்பதை நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

இந்த குழப்பத்தை போக்க உபேர் நிறுவனம் குரல் அடையாளம், உருவ அடையாளம் போன்றவை மூலம் ஓட்டுனர்கள் பதிவு பெற்றவர்களா என்பதை கண்டறிய முதலில் முடிவு செய்தனர்.   ஆனால் அதில் பல தவறுகள் நேர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.  எனவே ஓட்டுனர்கள் தங்களது செல்ஃபியை நிறுவனத்துக்கு அனுப்பி விட்டு பயணத்தை துவங்க வேண்டும் என கூறி உள்ளது.   இந்த செல்ஃபி உடனடியாக கணினி மூலம் பரிசோதிக்கப்பட்டு ஓட்டுனர் பதிந்துள்ளவரா என்பதை கண்டறிய முடியும் என நிர்வாகம் தெரிவிக்கிறது.

இந்த முறை தற்போது டில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், அகமதாபாத், மும்பை, பூனே, லக்னோ போன்ற நகரங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.  மற்ற நகரங்களுக்கும் இந்த முறை விரிவாக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.