உ பி தேர்தல் பிரச்சாரத்துக்குமட்டும் ரூ 5500 கோடி செலவு- ஆய்வறிக்கை

லக்னோ, 

உத்தரபிரதேச தேர்தலில் அனைத்துக் கட்சிகளும்  செலவழித்த தொகை ரூ 5500 கோடி என ஓர் ஆய்வறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்தலில் பாஜக அறுதிபெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த தேர்தலின்போது தேர்தல் நடத்தைவிதிகள் மீறப்பட்டதாக பல்வேறுகுற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், உ.பி தேர்தல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவிலே ஓட்டுக்காக அதிகளவில் பணம் செலவழிக்கப்பட்டது இந்தமாநிலத்தில்தான் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

ஒரு வேட்பாளர் 25 லட்சம் ரூபாய் வரை தேர்தல் செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் வழிகாட்டியிருந்தாலும். அது நடைமுறைக்கு உதவாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நடந்துமுடிந்த தேர்தலில்  பிரச்சாரத்துக்கு மட்டும் ரூ 600 கோடியிலிருந்து 900 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு வாக்குக்கு ரூ. 750  வேட்பாளர்கள்  கொடுத்துள்ளனர் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்காக தர தயாராக வைக்கப்பட்டிருந்த 200 கோடி ரூபாய் உத்தரபிரதேசத்திலும், பஞ்சாபில் 100 கோடி ரூபாயும்  அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால்  பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பணத்தை விட 4 அல்லது 5 மடங்கு பணம் தேர்தல் பிரச்சாரம் மூலம் வாக்காளர்களுக்கு தரப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்குத் தரப்பட்டுள்ளதாகவும்,  கடும்போட்டி நிலவிய  தொகுதிகளில்  வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து 500 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை கூட பணம் தரப்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.