உ.பி. வாக்காளர் பட்டியலில் குளறுபடி: வாக்காளர்கள் படத்துக்கு பதில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன், யானை, புறா படங்கள்

 வாரணாசி :

உ.பி. மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், வாக்காளர் படங்களுக்கு பதிலாக கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மற்றும் பறவைகள், மிருகங்கள் படங்கள் இடம்பெற்றுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலியா சட்டமன்ற தொகுதியில் வெளியான வாக்காளர் பட்டியலில் இந்த குளறுபடிகள் நடைபெற்றுள்ளன.

2019 ம் ஆண்டு நடைபெற உள்ள  லோக்சபா தேர்தலை முன்னிட்டு,  புதிய வாக்காளர் சேர்க்கை நடைபெற்று இறுதிப்பட்டியல் வெளியிடும் பணி நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உ.பி. மாநிலம் பாலியாக தொகுதிகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், 51 வயது துர்காவதி என்ற பெண்ணின் படத்திற்கு பதில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் படம் இடம்பெற்றுள்ளது.

இதே போன்று 85 வயதாகும் முன்னாள் மத்திய அமைச்சர் நாரத் ராய் பெயருக்கு அருகே யானையின் படமும், குன்வார் அன்குர் சிங் என்பவரின் புகைப்படத்திற்கு பதில் மான் படமும், பெண் ஒருவரின் பெயருக்கு அருகில் புறா படமும் இடம்பெற்றுள்ளது. இது போன்று பல வாக்காளர்களின் படங்களுக்கு பதில் காட்டு விலங்குகளின் படம் இடம்பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வாக்காளர் பட்டியல் தயார் செய்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதில் அளித்துள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி தான் பணியில் சேர்ந்த 20 நாட்கள் ஆகிறது. எனவே, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும், தவறுகள் சரிசெய்யப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறி உள்ளார்.