ஊடகங்களை அடக்க முயலும் பாஜக அரசு : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டில்லி

டகங்களை பாஜக அரசு வருமான வரிச் சோதனை நடத்துவதன் மூலம் அடக்க முயல்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்

சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை அதிகரித்து வருகிறது. இவ்வாறு சோதனை நடத்துவதன் மூலம் கிடைத்த விவரங்கள் பெரும்பாலும் அறிவிக்கப்படாமலும் உள்ளது. குறிப்பாக செய்தி ஊடகங்களின் அலுவலகங்களில் பெருமளவில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

இவ்வகையில் பிரபல செய்தி ஊடகமான ”தி குவிண்ட்” அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த ஊடகத்தின் உரிமையாளர் ராகவ் பேல் இல்லம் நொய்டாவில் உள்ளது. அத்துடன் இந்த ஊடக உரிமையாளரின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையின் போது இங்கு பணி புரியும் ஊழியர்களின் விலாசம், வங்கிக் கணக்குகள் ஆகிய விவரங்கள் கேட்டு பெறப்பட்டுள்ளன. சமீபகாலமாக பாஜக அரசை இந்த ஊடகம் கடுமையாக விமர்சித்து வருவதால் இந்த சோதனை நடைபெற்றதாக பெயர் தெரிவிக்க விரும்பாத ஊடக ஊழியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “வருமான வரி சோதனைகள் மூலம் பாஜக அரசு ஊடகங்களை மிகவும் கொடுமைப்ப்டுத்தி வருகிறது. இவ்வாறு கொடுமைகள் செய்வதன் மூலம் தனக்கு எதிரான ஊடகங்களை அடக்க முயல்கிறது. இதுவே இந்த அரசின் கொள்கை ஆகும்” என தெரிவித்துள்ளார்.