எட்டு வழிச்சாலைக்காக கல்லறையை அகற்றுவதா?: சிங்கப்பூரில் எதிர்ப்பு

சிங்கப்பூர்:

எட்டு வழிச் சாலைக்காக பழமையான புக்கிட் ப்ரவுன் கல்லறையை அகற்றும் சிங்கப்பூர் அரசின் நடவடிக்கைக்கு மக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சிங்கப்பூரில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள புக்கிட் ப்ரவுன் கல்லறைத் தோட்டத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான கல்லறைகள் உள்ளன. சிங்கப்பூரில் குடிபெயர்ந்த சீனர்களின் கல்லறைகளும் இதில் அடங்கும்.

மேலும் ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் இரண்டாம் உலகப் போரை நினைவுகூறும் வகையிலும் இந்த கல்லறைத் தோட்டம் அமைந்துள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்லறைத் தோட்டம் மூடப்பட்டாலும், இறந்தவர்களின் வாரிசுகள் இன்றும் அங்கு சென்று, மூதாதையர்களை வணங்கி வருகின்றனர்.

2030 க்குள் இந்த கல்லறைத் தோட்டத்தை எட்டு வழிச் சாலைக்காக முற்றிலும் அகற்ற சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. அதன்பின்னர், வழிபாடு நிறைவு பெறும் என்பதால் மக்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.
இது வாழும் அருங்காட்சியகம். இங்கு தினமும் ஏராளமானோர் நடைப் பயிற்சி மேற்கொள்கின்றனர். புக்கிட் ப்ரவுன் கல்லறையை அகற்ற 2011ம் ஆண்டு அறிவித்ததிலிருந்தே அதை காப்பதற்காக போராடி வருகிறோம் என்கிறார் தன்னார்வலர் டாரென்.
இது குறித்து அரசு தரப்பில் கூறும்போது, எட்டு வழிச்சாலைக்காக 4 ஆயிரம் கல்லறைகளை மட்டுமே அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் அழிந்துவிடும் என்று பிரச்சாரம் செய்வதெல்லாம் தேவையற்ற ஒன்று என்றனர்.