எதிர்கட்சிகள் ஓர் அணியாக இணையுமா? : இன்று பேச்சு வார்த்தை

டில்லி

திர்க்கட்சிகள் அனைத்தும் பா ஜ க வுக்கு எதிராக ஓர் அணியில் இணைவது குறித்து இன்று பேச்சு வார்த்தை நடக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி, பா ஜ வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியாக இணைந்து செயல்பட 16 கட்சிகள் இணைந்து  ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.  இதில் சரத் பவாரின் தேசிய காங்கிரஸ் கட்சி தவிர மற்ற கட்சிகள் கலந்துக் கொண்டன.   தற்போது  சில முக்கிய எதிர்க்கட்சிகள் இன்று அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக ஒரு மூத்த எதிர்க்கட்சித் தலைவர்  கூறி உள்ளார்.

இன்று நடக்கவுள்ள பேச்சு வார்த்தைகளில் எந்தெந்த கட்சிகள் பங்கு பெறுகின்றன என்பது இன்னும் தெரியவில்லை.   ”தேர்தல் பிரச்சாரத்தில், பண மதிப்புக் குறைப்பு நடவடிக்கையின் தோல்வி,  அவசர கதியில் அமுலாக்கப்பட்ட ஜி எஸ் டி,  சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் தாக்கப்படுவது, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு ஆகியவைகளை மக்கள் முன் கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்படும்.  இதில் சுமார் 5 அல்லது 6 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ள உள்ளனர்” என அந்த மூத்த எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் தற்போது நடந்த பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சியின் இரு சட்ட மன்ற உறுப்பினர்கள் பா ஜ க உறுப்பினருக்கு வாக்களித்ததால் காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தி கிளம்பி உள்ளது.   அதனால் இந்த கூட்டணியில் தேசிய காங்கிரஸ் இணையுமா என்பது சந்தேகத்துக்குரியது என காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.