எதிர்மறை செய்திகளை கண்காணிக்க நடவடிக்கை: தனியார் ஏஜென்ஸிகளிடம் டெண்டர் கோரியது மத்திய அரசு

புதுடெல்லி:

மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு, அனைத்து வகை ஊடகங்களில் பாஜக அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எதிர்மறை செய்திகள் வராமல் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சமுக வலைதளங்கள், டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்களில், பிரதமர் அலுவலகம் மற்றும் முக்கிய அமைச்சகங்கள் குறித்து எதிர்மறையான செய்தி வருவதை கண்காணிக்குமாறு மத்திய மக்கள் தகவல் தாெடர்புத் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 


இதற்காக தனியார் ஏஜென்ஸிகளை நியமிக்க மத்திய மக்கள் தகவல் துறை முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை எதிர்கொள்ள உதவும் என பாஜக நினைக்கிறது.
இது தொடர்பாக ஏஜென்ஸிகளை நியமிக்க மத்திய மக்கள் தகவல் துறை கடந்த மாதம் டெண்டர் விட்டுள்ளது. இந்த ஏஜென்ஸிகள் ஒவ்வொன்றும் 4 ஊடகங்களை கண்காணித்து பிப்ரவரி 6-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

மத்திய செய்தி ஒலிபரப்புத் துறையும் இதுபோன்ற டெண்டர் விட, மக்கள் தகவல் துறை சிபாரிசு செய்துள்ளது.
இந்த ஏஜென்ஸிகள் எலக்ட்ரானிக் மீடியா கண்காணிப்பு மையத்துடன் இணைந்து செயல்படுவர். பாஜக சாதனைகளை விளம்பரப்படுத்த, ஊடகங்களுடன் இந்த மையம் தாெடர்பில் இருக்கும்.
இது குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ~ஊடகங்களை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்பதும், சாதனை செய்திகளை ஊடகங்கள் வழியே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதும் மத்திய தகவல் துறையின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதற்கும் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்றார்.

நியூ மீடியா விங்க் மற்றும் எலக்ட்ரானிக் ஊடக கண்காணிப்பு மையம் திரட்டும் ஆய்வு அறிக்கைகள் குறித்து. மத்திய மக்கள் தகவல் துறையுடன் ஆலோசிக்கப்பட மாட்டாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.