என்எல்சிக்கு ஏன் எதிர்ப்பு? இதுதான் மேட்டரே..

என்எல்சிக்கு ஏன் எதிர்ப்பு? இதுதான் மேட்டரே..

சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்


ஒவ்வொரு நாட்டிலும் நெம்பர் ஒன் ரவுடி, அந்த நாட்டின் அரசாங்கம்தான் என உலக அளவில் ஒரு சிந்தாந்தம் உண்டும். மக்கள் மீதான கட்டற்ற அடக்குமுறையையும் ஏமாற்று வழிமுறைகளையும் பார்த்து உருவான சிந்தாந்தம் இது.

இதன் அடிப்படையில் மட்டுமே செயல்படுகிற, குட்டி ரவுடிகள் என்ற அரசாங்க அமைப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றே, நெய்வேலியில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் எனப்படும் என்எல்சி..
இந்திய நாட்டின் லாபம் ஈட்டும் அரசின் நவரத்னா நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது பெருமைக்குரிய விஷயமே.

பல்லாயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு மற்றும் லட்சக்கணக்கான நுகர்வோருக்கு மின்சார பயன்பாடு என என்எல்சியின் அருமை பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட அற்புதமான நிறுவனம் விரிவாக்கம் என்றால் எல்லோரும் சந்தோஷப்படத்தானே வேண்டும்? ஏன் மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.?

இங்கேதான் விஷயமே அடங்கியிருக்கிறது. என்எல்சி நிறுவனம் என்பதையே முழுக்க முழுக்க ஒரு மோசடிப்பேர்வழியாக பார்க்கிறார்கள் அப்பகுதியில் உள்ள மக்கள். ஆரம்பத்தில் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்தால் நிரந்தர வேலை, மாற்று இருப்பிடம் என இனிப்பை காட்டினார்கள்.

மண்ணின் மைந்தர்களும் நாட்டுக்கே நம் பூமிதானே மின்சாரம் தரப்போகிற என்ற நல்லெண்ணத்தில் மனம் உவந்து நிலங்களை என்எல்சிக்கு தந்தார்கள்.
ஆனால் காலப்போக்கில் என்எல்சி அதன் அதிகார புத்தியை காட்ட ஆரம்பித்துவிட்டது. சுரங்கத்திற்கு நிலம் தந்தவர்களுக்கு நிரந்தர வேலையை தருவதில் தில்லாலங்கடிதனத்தை காட்டியது, பல்வேறு நிபந்தனைகளை விதித்து, விவசாய பூர்வகுடிகளை பார்த்து உங்களை வேலையில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு உங்களிடம் முழுமையான தகுதிகள் இல்லை என்று திருப்பியடித்தது.


மண்ணின் மைந்தர்கள் என்எல்சி நிறுவனத்தின் முக்கியமான பணிகளில் புறக்கணிப்பட்டு அங்கெல்லாம் வட மாநிலத்தவர்கள் திட்டமிட்டு இறக்கப்பட்டார்கள். ஏகப்பட்ட சலுகைகளுடன் பெரும் தொகையை சம்பளமாக பெறுபவன் வேற்று மாநிலத்துக்காரன். சொற்ப சம்பளத்தில் தற்காலிக வேலைக்காரனாய் மண்ணின் மைந்தன்..

முதல் சுரங்கம் அமைத்து இறுதியில் ஏமாற்று வேலையை ஆரம்பித்த என்எல்சி, இரண்டாவது சுரங்கத்திற்கும் அதே வேலையையே காட்டியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களையும் வீடுகளையும் கைப்பற்றிக்கொண்டபிறகு அனைவரையும் விதவிதமாக விரட்டியது. உரிய இழப்பீடு, நிரந்தர வேலை, மாற்று இருப்பிடம் போன்றவற்றில் என்எல்சி மேற்கொண்ட ஏமாற்று வேலைகள் இன்று வரை முடிவுக்கு வந்தபாடில்லை.
சுருக்கமாக மூன்றே விஷயங்கள்தான்..ஆனால் மூன்றும் உச்சகட்ட கொடுமையானவை..

ஒன்று, நிலம் தருபவர்களுக்கு உடனடியாக நிரந்தர வேலை என்கிற உரிமையை, கடமையை என்றைக்கோ அழித்துவிட்டது என்எல்சி.
தினம் சொற்ப சம்பளம் என்ற தற்காலிக ஊழியர்களாய் பல ஆயிரம் பேர் ஆண்டுக்கணக்கில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் நிரந்தர வேலைக்காக நடத்தாத போராட்டங்களே கிடையாது. இவர்கள் நிலைமையே படுமோசம் என்றால் இவர்களைவிட இன்னும் படுபடுபடுபடு மோசமான நிலையில் உள்ள ஒரு பரிதாப குரூப் ஒன்று உள்ளது. அது, ஒப்பந்தக்காரர்களிடம் எந்த சலுகையும் இல்லாமல் வேலைசெய்யும் தினக்கூலிகள்.

இவர்களுக்கான ஒப்பந்தத்தில் பத்தாயிரம் ரூபாய் மாதச்சம்பளம் என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் பத்தாயிரம் உண்மையிலேயே வழங்கப்படுவதில்லை.

சம்பளம் மாதாந்திர அடிப்படையில்லாமல், தின அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டு வருகிறது. மாதம் முழுவதும் ஒருவர் உழைத்தாலும் 26 நாட்கள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். வாராந்திர விடுப்புகளுக்கு சம்பளம் கிடையாது..

26 நாள் சம்பளம் எனும்போது பத்தாயிரத்திலிருந்து 8,658 ரூபாய்க்கு இறங்கிப்போய்விடும். இந்த 8,658 ரூபாயையும் ஒரு தொழிலாளி அப்படியே வாங்கிவிடமுடியாது.

தொழிலாளர் வைப்பு நிதிக்காக 12 சதவீதம் போய் கிடைப்பது 26 நாள் உழைப்புக்.க வெறும் 7,620 ரூபாய். ஆக ஒரு நாளைக்கான நிஜக்கூலி., 293 ரூபாய்தான். வேறெந்த சலுகையும் இந்த 293 தாண்டிகிடையவே கிடையாது. தினமும் 293 வாங்கிக்கொண்டுதான், என்எல்சி எப்படியும் நமக்கு ஒரு நாள் நிரந்தர வேலை தந்துவிடும் என்ற ஏக்கத்தில் வருடக்கணக்கில் மாடாய் உழைக்கிறார்கள்.. எல்லாவற்றையும்விட, கேட்டாலே அடிக்கலாம்போல கோபம் வரும் என்று சொல்வார்களே, அந்த மாதிரி, இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, 26 நாளெல்லாம் வேலை கொடுக்க மாட்டார்கள். 15 அதிகபட்சம் 20 நாட்கள். அவ்ளோதான்.

என்எல்சி வளாகத்தில் பணிபுரிகிறார்கள் என்று சொல்லிக்கொள்வதைத்தவிர வேறெந்த புண்ணாக்குக்கும் என்எல்சியால் இவர்களுக்கு பிரயோஜனம் இல்லை. செத்தவன் வாயில் வெச்ச வெத்திலை யாருக்கும் உதவாது என்பார்கள். ஆனால் என்எல்சிக்கோ, செத்தவன் வாயில் அந்த வெத்திலையைகூட வைக்க மனசு வராது என்பது பல பேருக்கு தெரியாது.

உச்சகட்ட கொடுமைகளில் இரண்டாவது விஷயத்திற்கு போவோம். என்எல்சிக்கு நிலத்தை கொடுத்துவிட்டதால் எப்படியும் நிரந்தர வேலை கிடைத்து விடும் என்று எதிர்பார்த்து இன்னமும் பைத்தியக்காரத்தனத்துடன் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் திரியும் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கூட்டம்..

இருபது இருபத்தைந்தாண்டுகள் தற்காலிக தொழிலாளியாய் மாட்டைவிட மோசமாய் உழைத்தும், இவர்களுக்கு நிரந்தர வேலையை என்எல்சி நிர்வாகம் தரவே தராது என்பதுதான் கசப்பான உண்மை.

நீதிமன்றத்தின் மூலம் நெருக்கடி ஏற்பட்டாலும் பல முட்டுக்கட்டைகளை போட்டுவிட்டு நிரந்தர வேலையை தராது என்எல்சி நிர்வாகம். அரசாங்கம், அரசியல், நீதிமன்றம் ஆகிய மூன்று தரப்பும் ஒன்று சேர்ந்து கடுமையான நெருக்கடியை தரும் சந்தர்ப்பங்களில் மட்டுமே நிரந்தர வேலையை அதுவும் அழுது கொண்டேவழங்கும் தங்கமான மனசு கொண்டது என்எல்சி நிர்வாகம்.
ஒன்றிரண்டு பேருக்கு கிடைக்கும் நிரந்தர வேலையை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு, என்எல்சி வேலை என்ற கனவில், இளமைக்காலத்தையும் 50வயதுக்கும் மேலான நடுத்தர காலத்தையும் தினக்கூலியாகவே கழிப்பவர்களையே நெய்வேலி வட்டாரத்தில் திரும்பிய திக்கெல்லாம் காணலாம்.

என்எல்சி என்ற நிறுவனம் வேலைவாய்ப்பில் செய்யும் மோசடியை நம்பியிருக்காமல் இந்த தினக்கூலிகள் கௌரவமாக ஒரு சுய தொழிலை ஆரம்பித்திருந்தால் இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் எவ்வளவோ முன்னேறியிருப்பார்கள்.

நிலத்தையும் கொடுத்து, அருமையான வாழ்க்கையையும் தொலைத்த இவர்களை காணும்போது, உலகில் எல்லாருக்குமே கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும், அரக்கமனம் படைத்த என்எல்சி நிறுவனத்தை தவிர.
மூன்றாவது கொடுமை, மாற்று இருப்பிடம், வீட்டு மனை சம்மந்தப்பட்டது.

நன்றாக விளையும் நிலங்களையும் பரம்பரையாக வாழ்ந்துவந்த வீடுகளையும் என்எல்சியிடம் பறிகொடுத்துவிட்டு முழுமையான இழப்பீடு பெறுவதற்குள் பல ஆண்டுகள் பிடிக்கும். அதற்கு எத்தனை தடவை எத்தனை அலுவலகங்களுக்கு நடைநடையாய் நடக்கவேண்டும் என்பதெல்லாம் கடவுளாலும் கணித்து சொல்லிவிடமுடியாது.
அப்புறம் வீட்டிற்கு என ஒரு இடத்தில் மனை கொடுப்பார்கள்.. இங்கேதான் முக்கியமான விஷயத்தை கவனிக்கவேண்டும். வீட்டுக்கு, மனைப்பட்டா கடைசிவரை கைக்கு வரவே வராது..

என்எல்சியை கேட்டால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போய் கேளுங்கள் என்பார்கள். அங்கே போய் கேட்டால் ‘’என்எல்சியில் போய் கேளுங்கள்.. எங்களுக்கும் எந்த ஃபைலும் வரவில்லை’’ என்பார்கள்.. நிலத்தை கொடுத்தவர்களை, கொஞ்சம்கூட ஈவு, இரக்கம், வெட்கம் மானம் சூடு சொரணையே இல்லாமல் இரண்டு பக்கமும், நாயாய் விரட்டியடிப்பார்கள்.

மனைக்கு பட்டா இருந்தால்தானே அதற்கு முழுமையான மதிப்பு? பட்டா இல்லாத மனையில் வீடு கட்டினால் புறம்போக்கில் குடியிருப்பதற்கு சமமானதுதானே?

மனை இருந்தால்தானே வங்கியில் வீட்டுக்கடன் தருவார்கள்? என்எல்சிக்கு நிலம் கொடுத்து மாற்று இடம் பெற்றவர்கள், எத்தனை பேர் வங்கியிலிருந்து வீட்டுக்கடன் பெற்றிருக்கிறார்கள் என்பதை யோக்கிய சிகாமணிகளான என்எல்சியும் கடலூர் மாவட்ட நிர்வாகமும் புள்ளி விவரத்துடன் சொல்லட்டுமே? முழுக்க முழுக்க கைப்பணத்தையோ அல்லது தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கியோதான் மாற்று இருப்பிடத்தில் நெய்வேலிவாசி வீட்டை கட்டியாக வேண்டும்.

முதல் மற்றும் இரண்டாவது சுரங்கம் அமைக்கப்பட்டதிலேயே கடலூர் மாவட்ட விவசாயிகளை ஏமாற்றி ஏமாற்றி சாகடித்த வகையில் இவ்வளவு பயங்கரங்கள் இன்னமும் ஒளிந்திருக்கின்றன. அப்படியிருக்கும்போது, என்எல்சி நிர்வாகம், மூன்றாவது சுரங்கத்திற்கும் நிலம் கொடுங்கள் என்று கேட்கிறது என்றால் அதன் பெயர் என்ன? திமிர்த்தனமா? அடாவடியா, எங்களை எவன் என்ன செய்துவிட முடியும் என்ற அகம்பாவத்தின் உச்சகட்டமா?

மறுபடியும் மறுபடியும் ஆசை வார்த்தை காட்டி விவசாய குடிகளை நடுத்தெருவில் நிற்கவைக்க வீசப்படும் மாயவலைதானே?
நாட்டின் வளர்ச்சிக்கு அரசின் தொழில் நிறுவனங்கள் மிகவும் அவசியம்தான். நாட்டின் ஒட்டு மொத்த நலனை கருத்தில் கொண்டு அந்த நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை கொடுப்பது குடிமகனின் கடமையும்கூட.

இங்கே பிரச்சினை என்றால் நிலத்தை கேட்கும் என்எல்சி யோக்கியன் கிடையாது என்பதுதான்..

புதிதாக கல்யாணமானவனின் மனைவி தற்செயலாக நோயிலோ, விபத்திலோ இறந்துவிட்டால், அவனுக்கு மாமனார் வீட்டிலேயே மச்சினிச்சியை பெண் கொடுக்க விருப்பப்படுவார்கள். காரணம், மாப்பிள்ளை என்பவன் தங்கள் மூத்த பெண்ணை அப்படி தலைமேல்வைத்து தாங்கினானே, இதுபோல் இன்னொரு மாப்பிள்ளை கிடைப்பானா என்று உருவாகியிருக்கும் எண்ணம்தான்..

இங்கே என்எல்சி என்கிற மாப்பிள்ளையோ, மாமனார் வீட்டில் அடுத்து மச்சினிச்சியை எதிர்பார்க்கிறது. அதுவும் எப்படி மனைவியை சித்ரவதை செய்ததே கொன்றுவிட்டு..? அப்புறம் என்ன, அந்த மாப்பிள்ளையை உருட்டுக்கட்டையால் அடிக்காமல் தூக்கி கொஞ்சுவார்களா?