d
டில்லி:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வி.ஸ்ரீதரன் என்ற முருகன், டி.சுதேந்திரராஜா என்ற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்ற அறிவு ஆகிய மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதைத் தொடர்ந்து அவர்களையும், இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்றுள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோரையும் ஆயுள் தண்டனையில் இருந்து விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வந்தது. தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  மத்திய அரசு முறையீடு  செய்தது. அந்த வழக்கை மூன்று  நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு அந்த மூன்று நீதிபதிகளும் அனுப்பினார்கள். .
அரசு குற்றவியல் சட்டம் 435-ன் கீழ் ஏழு  பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும். அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் படி மாநில அரசு அந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு எந்த தடையும் இல்லை என  அரசியல் சாசன அமர்வு  தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில்   ஏழு  பேரும் ,இருபது  ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்துவிட்டதாக  கூறி, தங்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளனர். இதில் நளினி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து, தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிஇருக்கிறார்.
இந்த ஏழு பேரின் மனுக்களை பரிசீலித்து, அவர்கள் அனைவருமே 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் இருந்துவிட்டதால், தண்டனையை குறைத்துவிட்டு அவர்களை விடுவிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.  இதையடுத்து  மத்திய அரசுக்கு  தமிழக அரசு கடிதம் எழுதி இருக்கிறது. .
ஆனால் தமிழக அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். பிறகு, பாராளுமன்றத்தின் லோக்சபா மற்றும், ராஜ்யசபாவில் ஏழுபேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் சார்பில் ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை லோக்சபா கூடியபோது, , காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த விவகாரத்தை எழுப்பினார். தமிழக அரசின் இந்த முடிவு குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் தர வேண்டும் என்றும் அவர்  மத்திய அரசைவலியுறுத்தினார்.