ஏ. கொ. இ.: 5: இளையராஜா – காலம் எழுதிய திரைக்கதை! – நியோகி

 

ஏன் கொண்டாட வேண்டும் இளையராஜாவை – தொடர் – அத்தியாயம்-5 – நியோகி

எம்.ஜி.ஆர் அல்லது ரஜினியின் வெற்றிப் படம் ஒன்று வெளி வருகிறது என்றால் அதனால் பலனடைபவர்களாகப் பலர் இருப்பார்கள் !

அந்தப் படத்தில் நடித்தவர்கள் – பங்காற்றிய நூற்றுக்கணக்கான டெக்னீஷியன்கள், ட்ஸ்ட்ரியூட்டர்ஸ், தியேட்டர் ஓனர்ஸ் என்பது வரைக்கும் நமக்கு வெளிப்படையாகத் தெரியும்.

ஆனால், இதைத் தாண்டி, பேனர் மேக்கர்ஸ் – போஸ்டர் பிரிண்டர்ஸ் – போஸ்டர் ஒட்டுபவர்கள், பாட்டு புஸ்தகம் போடுபவர்கள் வரைக்கும் நம் கவனத்துக்கு வராததொரு மூன்றாம் உலகம் ஒன்று பலனடைந்து கொண்டிருக்கும்.

உண்மையில் இந்த மூன்றாம் உலகம் மிக எளியது. அதே சமயம் மிகப் பெரியது.  ஒரு ஸ்டாரை உருவாக்குவதில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. நாட்டின் மூலை முடுக்கெல்லாம், ஏன், தியேட்டர்களே இல்லாத மலைக் கிராமங்களில் கூட ஒரு ஸ்டாரைக் கொண்டு போய் சேர்த்துவிடும் வல்லமை இந்த உலகத்துக்கு உண்டு.

இவர்கள் யாரால் பயனடைய முடியுமோ அவர்களின் அடுத்த படைப்புக்கு கன்ணிமைக்காமல் காத்திருப்பார்கள். அப்படி, எவர் ஒருவருக்காக அந்த மூன்றாம் உலகம் காத்திருக்கிறதோ அவரே அந்தக் காலகட்டத்தின் சூப்பர் ஸ்டார் !

அப்படி, இசை உலகத்தின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் இளையராஜா ! அவரால், கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் எத்தனையோ பேர் !

சென்னை, மீர்சாகிப் பேட்டையில் இருக்கும் ஜான் ஜானிக்கான் ரோட்டில் அன்று அஸ்கர் அச்சகம் என்று ஒன்று இருந்தது. வெறும் இளையராஜாவின் பாக்கெட் சைஸ் ஃபோட்டோவை  விதம் விதமாக  அச்சடித்தே இதன் ஓனர் கார் வாங்கினார். அதை பெருமையாகவும் சொல்லிக் கொள்வார் !

ஆடியோ உலகத்தின் இதயம் என்றால்…அது, சென்னை மவுண்ட் ரோட்டில் இருக்கும் “ரிச்சி ஸ்ட்ரீட்” என்று சொல்லலாம் !

மிகக் குறுகலான சந்து இது என்றாலும், தினசரி பல கோடிகளுக்கான வியாபாரத்தை சர்வ சாதாரணமாக செய்து முடித்து விடும் மாயாஜால மார்கெட் இது !

இளையராஜா இசையமைத்த ஒரு படத்தின் காஸட் வெளிவருகிறது என்றால்… அன்று, ரிச்சி ஸ்ட்ரீட்டே அல்லோகல்லப்படும் !  மறு நாள் காலை 9 மணிக்கு காஸட் ரிலீஸ் என்று அறிவிப்பு வந்து விட்டால்….முந்தைய நாள் இரவிலிருந்தே கடை வாசலில் கூட்டம் நிற்க ஆரம்பிக்கும். சிறு வியாபாரியகள் க்யூ தனியாக நிற்கும் !  எனக்கு  500 கேஸட், எனக்கு 1000 கேஸட் என்று துண்டு சீட்டை கொடுத்து வைக்க முண்டியடிப்பார்கள் !

அது தவிர, வெளியூர் செல்லும் பஸ்களில் தனிப் பாதுகாப்போடு லட்ச லட்சமாக கேஸட்டுகள் ஏற்றப்படும் !

திருநெல்வேலி – நாகர் கோயில் – மதுரை என விடிய விடிய அந்தந்த ஊர்களில் இளையராஜாவின் ரசிகர்கள் விடிய விடிய தவம் கிடப்பார்கள். முதல் பொட்டியை பிரித்து, முதல் காஸட்டை எடுத்து பூஜை போட்டு முடித்துத்தான் வியாபாரம் துவங்க வேண்டும். ஆனால் அதற்குள் கடைக்குள் தள்ளு முள்ளு நடந்து விடும். கடைக் கண்ணாடிகள் உடையும்.

ராஜாவின் ரசிகர்களை கண்ட்ரோல் செய்ய முடியாது. அவர்களை கோபிக்கவும் முடியாது. காரணம், அந்த கூட்டத்தில், பஸ் கண்டக்டரும் இருப்பார்  – பாங்க் மேனேஜரும் இருப்பார்.

ஒரு கட்டத்தில், ஆடியோ வியாபாரிகள் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள். பஸ்ஸிலிருந்து காஸட் பொட்டியை இறக்கும் போதே கற்பூரம் காட்டி விடுவார்கள் ! எல்லா வேண்டுதலையும் அங்கேயே முடித்துக் கொண்டு, அங்கிருந்து நேராக கடை வாசலில் கொண்டு வந்து போட்ட அடுத்த கணம் பிய்த்துக் கொண்டு போய் விடும்.

என்னதான் கல்லா நிறைந்தாலும்…

“ச்சே…இந்த ராஜா படம் வந்தாலே இப்படித்தான்யா ! கவுண்ட்டர்ல சொகமா நின்னு வியாவாரம் பாத்த திருப்தியே இல்லை போ…” என்று சலித்துக் கொண்ட வியாபாரிகளும் உண்டு.

ஆனால், படத்துக்கு படம் ரசிகர்களின் இசை வெறி ஏறிக் கொண்டே இருந்தது.

ஒரு முக்கியமான விஷயத்தை இந்த கட்டுரையில் பதிய வைக்க விரும்புகிறேன் !

ஒரு கட்டத்தில்,  ஆர்.டி.பர்மன் – எல்.பி – பப்பி லஹரி என பாம்பே இசைக்கு அடிமையாகிக் கிடந்த தமிழ் இசை ரசிகர்களை, தமிழ் நாட்டு இசைக்குள் இழுத்து வந்து கட்டிப் போட்டது இளையராஜாதான்.

அதைவிட முக்கியமாக, தமிழ் இசை ரசிகர்களின் “லிஸனிங் ஆட்டிட்யூட்டை” மேலும், மேலும் கூர்மையாக்கியது இளையராஜாவின் இசைதான் ! அந்தப் பெருமை இளையராஜாவையே சாரும் ! அதில் மாற்றுக் கருத்தே இல்லை !

இளையராஜாவின் இசை, ரசிகர்களிடையே ஒரு மதமாகவே வியாபித்து இருந்தது. அதற்கு போட்டி மதமாக அதுவே இருந்தது.

அன்றெல்லாம், இளையராஜாவின் புதுப் படம் ரிலீஸ் என்றால், அவரது ரசிகர்களிடையே போட்டி பிளக்கும். வீட்டு வாசலில், ஸ்பெஷல் ஸ்பீக்கர் செட்டுகளை வாடகைக்கு கொண்டு வந்து வைத்து, பரபரவென்று புதுக் காஸட்டைப் பிரித்து, சத்தமாகப் போட்டு விடுவார்கள்.

எதிர் சந்துக்காரன், “இளையராஜாவுக்கு, என்னை விட பெரிய ரசிகனாடா நீ….?” என்று சத்தத்தை இன்னும் கூட்டுவான்.

இவர்களின்  அலம்பலில் பாடம் எடுக்க முடியாமல் ஸ்கூல் ஹெட்மாஸ்டர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோனை சுழற்றுவார்கள் !

ஊர் அல்லோகல்லப்பட்டுஅடங்கும் !!

“புன்னகை மன்னன்” பட ஆடியோ ரிலீஸின் போது, “என்னமோ கம்ப்யூட்டர் இசையாம்ல…ராஜா புதுசா போட்டுருக்காருடா..” என்று மெட்ராஸிலிருந்து ஸ்பெஷல் ஸ்பீக்கரை செய்ய சொல்லி, லாரி ஏற்றிக் கொண்டு போன ராஜாப் பயித்தியங்களெல்லாம் கூட உண்டு !

ஒரு இளையராஜா படத்துக்கு ஏறத்தாழ ஐந்து இலட்சம் காஸட்டுகளாவது ரிலீஸ் ஆகும் ! ஆனால், அது போதாது…! மேலும் மேலும் டிமாண்டுகள் இருக்கும்.. அவருடைய பாடல் காஸட்டுகளை வெளியிடும் உரிமையை அன்று எக்கோ நிறுவனம் பெற்றிருந்தது. அந்த நிறுவனத்தை பார்த்தசாரதி என்பவர் நிர்வகித்துக் கொண்டிருந்தார். நல்ல நிர்வாகிதான் என்றாலும் வேறு ப்ரச்சினைகள் எல்லாம் எழ ஆரம்பித்தது. சப்ளை பாதித்தது. அதன் காரணமாக “பைரஸி” உள்ளே தலை காட்டியது.

இளையராஜாவின் ஒரிஜினல் காஸட்டுகள் விற்ற கணக்கோடு, அவருடைய பாடல்களின் பைரஸிகள் விற்றது 20 மடங்கு அதிகமாக இருக்கும் என்கிறது ஒரு கணக்கு !

அன்று மதுரையில் இருந்த விஜய்ராஜா ம்யூஸிகல்ஸ் தமிழ் நாட்டு ஆடியோ பிஸினஸில் 40 % வியாபாரத்தை தன்னகத்தே கொண்டதாக இருந்தது. இளையராஜாவின் இசையால் கொடி கட்டிப் பறந்தது. இன்று அந்தக் கம்பெனியே அங்கு  இல்லை.

அது தவிர, ஊர் பேர் தெரியாத லோக்கல் கம்பெனிகள் எல்லாம் இளையராஜா பாடல்களின் காம்பினேஷங்களைப் போட்டு “இளைய ராஜா” ஹிட்ஸ் என்று கொண்டு வந்தார்கள்.

ஒன்றல்ல…ரெண்டல்ல…வால்யூம் 17 வால்யூம் – 18 என்று போய்க் கொண்டே இருக்கும். ஒவ்வொன்றும் லட்சக்கணக்கில் விற்கும்.

அதன் பலன் எக்கோவுக்கும் போகாது. இளையராஜாவுக்கும் போகாது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இளையராஜா, பிறகு தானே ஒரு ஆடியோ கம்பெனியை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.

ஆனால், பைரஸிக்கள் இன்றும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன.

இது ஒரு பக்கம் என்றால், ஆடியோ பாடல்களைக் கேட்கும் ம்யூஸிக் ப்ளேயர்ஸ்கள் ஒரு புறம் சக்கை போடு போட்டன. ஆம், இளையராஜா தன் இசையை ஸ்டீரியோவில் ரெக்கார்டு செய்து வெளியிட ஆரம்பித்தார்.

அது வரை மோனோவிலேயே கேட்டுக் கொண்டிருந்த காதுகளுக்கு…

“லெஃப்ட் – ரைட் – சென்டர்”   என்னும் புதிய அனுபவம் வெறியேற்றிவிட… அதை இன்னும் மேன்மையோடு கேட்க வேண்டும் என்று இசை ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பிக்க…ரிச்சி ஸ்ட்ரீட் திக்கு முக்காடியது !  இளைய ராஜா பாடல்களைக் கேட்க வேண்டும் என்றே, ஸ்டீரியோ செட்கள் லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்தன.

அன்று ரிச்சி ஸ்ட்ரீட்டில் தங்கச்சன் என்று ஒருவர் இருந்தார். விதம் விதமான ஸ்டீரியோக் கருவிகள் செய்வதில் விற்பன்னர். காருக்குள், அலமாரிக் கதவுக்குள், கட்டிலுக்குள், சோஃபாவுக்குள் என நூதனமான இடங்களில் உயர்தர ஸ்டீரியோக்களை பொதித்து தருவதில் பெயர் போனவர். 1980 களில்….பெரும் பொருட் செலவில், அவர் செய்து கொடுத்த அத்தனை செட்களும் இளையராஜா பாடல்களை கேட்க மட்டுமே !! லேயர் லேயராக அவர் செய்து வைத்திருக்கும் இசை ஜாலத்தை முழுமையாக அனுபவிக்கவே !!

கட்டுரையின் இந்த இடத்தில்…மேலும் தொடர முடியாமல் மனம் கனக்கிறது !

தனது இசையால் ஊரெங்கும் ஸ்டீரியோ செட்கள்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்த இளையராஜாவின் வாழ்வில்… காலம் எழுதிய திரைக்கதையை எண்ணி மனம் நெகிழ்கிறது !

ஆம், அன்றொரு நாள் வறுமையின் கிடுக்கிப் பிடியை தாங்க முடியாமல் இளையராஜாவையும் அவரது சகோதரர்களையும் பிழைப்புத் தேடி சென்னைக்கு அனுப்பி வைக்கத் துணிந்தார் இளையராஜாவின் தாயார் சின்னத் தாயம்மா !

ஆனால், பிள்ளைகளை அனுப்பி வைக்க அந்த ஏழைத் தாயிடம் காசு இல்லை !! என்ன செய்வது…?

வீட்டில் பொக்கிஷமாக வைத்திருந்த தனக்கு விருப்பமானதொரு பொருளை எடுத்து, அதை நானூறு ரூபாய்க்கு விற்று, அந்தப் பணத்தை அப்படியே கொடுத்து, தன் பிள்ளைகளை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

“இதையெல்லாம், இவ்வளவு விலை கொடுத்து மீண்டும் நம்மால் வாங்க முடியுமா…?” என்று யோசிக்கக் கூடிய வறிய நிலையில் அன்றைய அவரது வாழ்க்கை இருந்தாலும், தன் பிள்ளை களின் எதிர்காலம் மட்டுமே முக்கியம் என்று கருதிய அந்தத் தாய், நானூறு ரூபாய்க்கு  துணிந்து விற்ற அந்த ஆசைப் பொருள்…?

ரேடியோ பெட்டி !

(தொடரும்…   )

Leave a Reply

Your email address will not be published.