ஓ என் ஜி சி எண்ணெய் கிணறுகள் தனியாருக்கு விற்க அரசு முடிவு

டில்லி

மும்பை மற்றும் வசாய் கிழக்கு பகுதிகளில் உள்ள பெரிய எண்ணெய் கிணறுகளை தனியார் மற்றும் வெளிநாட்டினருக்கு அரசு விற்க முடிவு செய்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்க கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மோடி ஒரு குழுவை அமைத்தார்.   அந்தக் குழு தற்போதுள்ள எண்ணெய் நிறுவனங்களின் வருமானம் மற்றும் எண்ணெய் கிணறுகளின் உற்பத்தி ஆகியவை குறித்து ஆய்வு நடத்தியது.   அத்துடன் இந்த குழு இது குறித்து திட்ட ஆணையத்துடனும் கலந்தாலோசித்தது.

இந்த ஆலோசனை அறிக்கையில் அரசு நிறுவனமான ஓ என் ஜி சிக்கு சொந்தமான மும்பை, வசாய் கிழக்கு, பன்னா, மற்றும் அசாம் கடல் பகுதிகளில் உள்ள எண்ணெய் கிணறுகளை தனியார் மற்றும் வெளி நாட்டினருக்கு விற்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.   இந்த விற்பனையில் வரும் நிதியில் 10% வரை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கவும் அந்த அறிக்கையில் ஆலோசனை கூறப்பட்டிருந்தது.

இந்த எண்ணெய் கிணறுகளின் உற்பத்தி உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப் படுகிறது.   இவை ஒ என் ஜி சி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் என்னும் இரு அரசு நிறுவனங்களுக்கு சொந்தமானவை ஆகும்.   நாட்டின் எண்ணெய் தேவையில் உள்நாட்டு  பங்கில் 95% ஓ என் ஜி சி கிணறுகளில் இருந்தும் 5 % ஆயில் இந்தியா லிமிடெட் கிணறுகளில் இருந்தும் பெறப்படுகின்றன.

ஆகவே இதற்கு இந்த இரு நிறுவனங்களும் ஆட்சேபம் தெரிவித்தன.   அதை ஒட்டி இந்த எண்ணெய் கிணறுகளை விற்க முடியாமல் உள்ளதாக அரசு அறிவித்தது.   ஆனால் புதிய கிணறுகளை அமைப்பதை விட ஏற்கனவே நல்ல உற்பத்தி உள்ளவைகளையே தனியார் மற்றும் வெளிநாடுகள் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

அரசு இந்த கிணறுகளை விற்க முடிவு செய்து தடையில்லா சான்றிதழும் அளித்துள்ளது.    ஆனால் அரசு நிறுவனமான ஒ என் ஜி சி இந்த விற்பனை குறித்து மேலே எதுவும் நடவடிக்கை எடுக்க தற்போது தடை விதித்துள்ளது.