கஜா நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் சாலை மறியல்

ஜா நிவாரண பொருட்களை வழங்காமல்   முறைகேட்டில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களை பதவி நீக்க கோரி திருவாரூர் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்  அரசு வழங்கும் நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.   இந்த நிலையில் திருவாரூர் அருகே குளிக்கரையில் தனியார் திருமணமண்டபத்தில் ஆனைவடபாதி, பெருந்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், குளிக்கரை உள்ளிட்ட 4 ஊராட்சிகளுக்கு அளிக்க  வேண்டிய நிவாரண பொருட்கள்வைக்கப்பட்டிருந்து.

அவற்றை மக்களுக்கு அளிக்காமல் கிராம நிர்வாக அலுவலர்கள் திலகவதி, துர்கா ராணி இருவரும் வாகனங்களில் ஏற்றி வேறு பகுதிக்கு எடுத்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த அப்பகுதிமக்கள் சிறை  இரு அதிகாரிகளையும் தடுத்து,   போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகளை மீட்டு   பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்திருந்தனர்.

ஆனால்  பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வரவில்லை. இதனால் பொது  மக்கள் மேப்பளம் என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பாகுபாடு இன்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்களை அளிக்க வேண்டும் என்றும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்தனர். இதன் பிறகு போராட்டம்  வாபஸ்பெறப்பட்டது.

சாலை மறியல் போராட்டம் காரணமாக மன்னார்குடி – திருவாரூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக  பாதிக்கப்பட்டது.