கடல்நீருக்கடியில் அருங்காட்சியகம் – புதுச்சேரி அரசின் புது முயற்சி

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பழைய துறைமுக பாலத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் 26.2 அடி ஆழத்தில் கடலுக்குள் அருங்காட்சியகத்தை சுற்றுலாத்துறையின் மூலம் அமைக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்படை, புதுச்சேரி அரசாங்கத்துடன், கடல்சார் தொழில்நுட்ப தேசிய நிறுவனம், கரையோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (இரண்டு சென்னை சார்ந்த தேசிய ஆய்வுக்கூடங்கள்) மற்றும் இயற்கை, சமூக, கலாச்சார மற்றும் ஆன்மீக சூழலைக் காக்கும் மற்றும் மேம்படுத்தும் ஒரு தொண்டு நிறுவனம், நீருக்கடியில் அமைந்துள்ள ஒரு சுரங்கப்பாதையை அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

இந்தியக் கப்பற்படையால் பயனற்று விடப்பட்ட `ஐ.என்.எஸ் கடலூர்’ என்ற கப்பலின் இயந்திரங்கள், உதிரிபாகங்கள் முழுமையாக நீக்கப்பட்டு கடலுக்கு நிறுவப்பட உள்ளது.

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவாறு நிறுவப்படவுள்ள இந்தக் கப்பல் 61.3 மீட்டர் நீளமும், 10.2 மீட்டர் அகலமும், 11.98 மீட்டர் உயரமும் உடையது. இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட இருக்கும் பகுதியில் கடல்வாழ் பல்லுயிர் பெருக்கம் ஏற்படுவதோடு மீன் பெருக்கமும், மீன் பிடிப்பும் அதிகரிக்கும்.

கடலுக்குள் இருக்கும் கப்பலைக் காண கடலுக்குள் செல்லும்போது டால்பின், திமிங்கிலம் மற்றும் கடல் சார்ந்த பறவைகளைக் கண்டு களிக்கலாம். அத்துடன் ஆழ்கடல் நீச்சலும் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த நீரடி அருங்காட்சியகத்தைக் காண புதுச்சேரிக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.