கட்ஜூக்கு முன்னோடிகளான ராஜாஜியும், எம்.ஆர். ராதாவும்!: ராமண்ணா

collage

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதி மன்றம் தடைவிதித்ததால் தமிழகமே பொங்கி எழுந்திருக்கிறது. இந்த நிலையில் “பொங்கல் விளையாட்டு என்று பெயரை மாற்றிவிட்டு விளையாட்டை நடத்துங்கள்”  என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ கூறியிருக்கிறாரே..

அவர் என்னதான் சொல்லியிருக்கிறார் என்பதை படித்துக்கொண்டிருந்தேன்:

அவர் சொல்லியிருப்பது இதுதான்:

“தமிழர்களே, உங்களுக்கு எப்போது எல்லாம் பிரச்சனை வருகிறதோ, அதனை தீர்க்க காஷ்மீரி பண்டிட்களிடம் செல்லுங்கள்.

12524080_10206616515704715_1323139010214722491_n

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு ஒன்றுமில்லாத உத்தரவை பிறப்பித்து உள்ளது, ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது. தமிழர்கள் அனைவரும் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர்.

ஒரு பிரச்சனையும் இல்லை, பிரச்சனையை நான் தீர்க்கிறேன்… சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்குதான் தடை விதித்து உள்ளது. எனவே விளையாட்டு போட்டியின் பெயரை மட்டும்

‘பொங்கல் விளையாட்டு’ என்று மாற்றுவிடுங்கள், விளையாட்டை நடத்துங்கள். பொங்கல் விளையாட்டுக்கு இங்கு தடை இல்லை…”

–    இதுதான் அவர் சொல்லியிருப்பது.

அட புதுசா சொல்லியிருக்காரே என்று நான் வியந்துகொண்டிருந்த நேரத்தில்தான் மூத்த பத்திரிகையாளரான உதய் அண்ணன் போன் செய்தார். அவரிடமும் எனது வியப்பை சொன்னேன்.

ராமண்ணா

சிரித்த அவர்,  “கட்ஜூவின் அக்கறை எல்லாம் சரிதான். ஆனால், “உங்களுக்கு எப்போது எல்லாம் பிரச்சனை வருகிறதோ, அதனை தீர்க்க காஷ்மீரி பண்டிட்களிடம் செல்லுங்கள். தீர்த்து வைக்கிறோம்” என்கிறாரே.. அதுதான் உதைக்கிறது.

இதே பாணியில் அவருக்கு முன்பே ஒரு தமிழர் பிரச்சினையை தீர்த்திருக்கிறார்.. தெரியுமா..” என்றார்.

“அட.. அப்படியா?  சொல்லுங்களேன்..” என்றேன்.

உதய் அண்ணன் சொல்ல ஆரம்பித்தார்:

“ஒரு கோடீஸ்வரர். தனது மகன்களின் நடவடிக்கை சரியில்லாததால் வெறுப்படைந்து தனது சொத்துக்கள் எல்லாவற்றையும் பழனி மலை கோயிலிலுள்ள ’பழநி முருகன்’ பெயருக்கு எழுதிவைத்துவிட்டு மறைந்துவிட்டார்.. மகன்கள் ‘கோவணாண்டி’ ஆகிவிட்டார்கள்.

உடனே, அப்போது புகழின் உச்சியில் இருந்த வழக்கறிஞரை நாடினார்கள்.

விஷயத்தை முழுதும் கேட்ட அந்த வழக்கறிஞர், ஒரு நிமிடம் சிந்திதார். பிறகு சிரித்தபடி,, ‘பழநி முருகன்’ என்கிற பெயரில்,  ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து, , சொத்துகளை உங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ளலாம்.  ஏனென்றால், பழநி கோயிலில் இருக்கும்  முருகனின் பெயர், “ பழநி முருகன்” அல்ல; தண்டாயுதபாணி. ’ என்று தீர்வு சொன்னார்.

மகன்களும் அவ்வாறே செய்ய.. சொத்துக்கள் அவர்களது கைக்கு வந்தது!” என்று சொல்லி முடித்தார் உதய் அண்ணன்.

“அடடே.. அப்படியா..” என்று நான் இன்னும் ஆச்சரியம் காட்ட..  “ஒரேயடியா ஆச்சரியங்களை எடுத்துவிட்டுவிடாதே.. அடுத்த ஆச்சரியப்படுவதற்கும் கொஞ்சம் விட்டுவை.. இதே போல இன்னொரு சம்பவமும் இருக்கிறது!” என்றவர், அதைச் சொல்ல ஆரம்பித்தார்:

“நடிகவேள் எம்.ஆர். ராதாவின் நாடகங்கள் அனைத்தும் சமூக சீரழிவுக்கு எதிரானவை. அதனாலேயே அவரது நாடகங்களுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பும்.

அதிலும் அவரது “ போர் வாள்” நாடகத்தில் புராண ஆபாசங்களை போட்டு கிழித்திருப்பார் ராதா.  சென்னையில் அந்த நாடகம் நடந்தபோது,  கோர்ட் உத்தரவு மூலம்  தடை விதிக்கப்பட்டு விட்டது.

அதே போல, அவரது இன்னொரு நாடகமான “ராமாயணம்” தடை செய்யப்பட்டது.

இப்போது சுதாரித்துக்கொண்டார் ராதா. அதாவது, அதே  நாடகத்தை “தேவாசுரப் பாடல்” என்று  மாற்றி அரங்கேற்றினார்.  நாடகம் சூப்பர் ஹிட்.

ஆனாலும் அதற்குப் பிறகு, பல இடங்களில் அடிதடி. ஏற்பட்டது.  இறுதியில் நாடகம் நடக்கும்போது ராமர் வேடத்திலேயே போலீசார் ராதாவை கைது செய்தனர்” என்று சொல்லி சிரித்தார் உதய் அண்ணா..

தமிழர்களுக்கு பிரச்சினை என்றால், காஷ்மீர் பண்டிட்களிடம் போக வேண்டியதில்லை என்பது புரிந்தது!

Leave a Reply

Your email address will not be published.