கண்கலங்கினார் சந்திரகுமார்

chandra

தேமுதிக கொள்கைபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏ, துணைச் செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர். வீரப்பன், திருவள்ளுர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சி.எச்.சேகர் எம்எல்ஏ, சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்எல்ஏ, வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜெ.விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள், மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், 95 சதவிகித தேமுதிகவினரின் விருப்பப்படி திமுக கூட்டணியில் சேர வேண்டும் எனவும், இதற்காக விஜயகாந்த் தங்களை அழைத்து பேச வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் விஜயகாந்த் கட்சியில் இருந்து நீக்கினார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நீக்கப்பட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது, ‘’தேமுதிக கட்சி ஆரம்பிக்கப்பட்டதும், நான் என் குடும்பத்தை விட்டுவிட்டு விஜயகாந்துடன் வந்தேன். அன்றைய நாள் முதல் தேமுதிக கட்சிக்காகவும், தலைவர் விஜயகாந்துக்காகவும் அனைத்தையும் இழந்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில் குடும்பத்தோடோ, என் குழந்தைகளோடோ இருந்ததில்லை. என் வீட்டைக் கட்டியபோது கூட, அதனை திறக்க, தலைவர் வர வேண்டும் என்பதற்காக பல லட்சம் செலவு செய்தேன்’’ என்று கண்கலங்கியபடி பேசினார் சந்திரகுமார்.