கமல் தைரியமில்லாதவர்!: தமிழிசை தாக்கு

சென்னை:

நடிகர் கமல்ஹாசன் தைரியமில்லாதவர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடுமையாக விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்று சமுதாயத்தை சீரழித்து வருவதாக பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்தார் கமல். அப்போது அவர், “தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் அன்பழகன், “அவன் இவன்” என்று ஏகவசனத்தில் கமலை விமர்சித்தார். இதற்கிடையே திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கமலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார். பதிலுக்கு கமல், நன்றி கூறினார்.

இந்த நிலையில் கமல் பேச்சு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்தார். அப்போது அவர், “கமல் தைரியமில்லாதவர். ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க. அரசை விமர்சிக்கும் தைரியம் அவருக்கு இருந்ததா? இப்போது மட்டும் பேசுகிறார்.

இப்படி பேசிக்கொண்டிருப்பதற்கு பதிலாக, திரையுலகில் சிரமப்படுபவர்களுக்கு அவர் உதவி செய்யட்டும்” என்று தெரிவித்தார். மேலும், “இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் தலையிடுவது தேவையற்றது” என்றும் தமிழிசை தெரிவித்தார்.