கருணாநிதி-ஸ்டாலின் இடையே என்ன நடக்கிறது? : குட்டி கதை கூறிய ஜெ.,

 முதல்வர் ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா

சென்னை: தமிழக அமைச்சர்கள், நிர்வாகிகள் இல்ல திருமண விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது அவரது பேச்சில், திமுக தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகன் ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் பனிப்போர் குறித்து குட்டிக் கதை கூறி விளக்கினார்.

கதை விபரம்: ஒரு சின்னப் பையன் தன் தந்தையிடம் சென்று “அப்பா எனக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடு” என்றான்.

உடனே தந்தை தனது மகனைப் பார்த்து “மகனே அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனயன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடம் இல்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயே தான் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

தந்தை சொல்லை மகன் கேட்கவில்லை. அரசியல் பாடம் கற்பதில் பிடிவாதமாக இருந்தான். மகன் “தந்தையே உங்களைப் பார்த்தே நான் அரசியலில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றான். வேறு வழியின்றி தந்தையும் மகனுக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுக்க சம்மதித்தார்.

மகனை அழைத்து “ஓடிப்போய் ஒரு ஏணி எடுத்துக் கொண்டு வா” என்றார்.

“எதற்கு ஏணி?” என்று கேட்டான் மகன். “இப்படியெல்லாம் கேட்கக் கூடாது நான் சொல்வதைச் செய்ய வேண்டும்” என்றார் தந்தை. மகன் ஏணியை எடுத்துக் கொண்டு வந்தான். “இந்த சுவற்றிலே ஏணியை சாத்தி வை. பிறகு ஏணியின் மீது ஏறி உச்சிக்கு செல்.

மேலே பரணியில் நான் என்னென்ன ஏமாற்று வேலைகளைச் செய்து அரசியலில் நிலைத்து நிற்கிறேன் என்பது பற்றி நெஞ்சைத் திறந்து எழுதி வைத்துள்ளேன். அரசியல் பற்றிய அனைத்து பாடங்களும் அவற்றில் உள்ளன. அதை கற்றுத் தேர்ந்தால் நீயும் அரசியலில் பெரிய ஆளாக ஆகலாம்” என்றார்.

“அப்பா நான் ஏணியிலே ஏறி மேலே போகிறேன். நீ கீழே இருந்து ஏணியை கெட்டியாக பிடித்துக் கொள்” என்றான் மகன். “அதைப் பற்றி நீ கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் தந்தையார். மகன் மெதுவாக ஏணியின் மேலே போனான். அவன் உச்சிக்குப் போனதும் தந்தை ஏணியின் மேல் இருந்த கையை எடுத்து விட்டார்.

ஏணி சரிந்து விழுந்தது. மகனும் கீழே விழுந்து விட்டான். வலி தாங்காமல் இடுப்பைப் பிடித்துக் கொண்டே எழுந்தான் மகன். “என்னப்பா இப்படி ஏணியிலிருந்து கையை எடுத்து விட்டாயே! உன்னால் தான் எனக்கு இடுப்பில் இப்போது அடிபட்டு இருக்கிறது” என்று கூச்சலிட்டான்.
தந்தை சிரித்துக் கொண்டே “எல்லாவற்றையும் நீ இப்போதே தெரிந்து கொண்டால் என்னை யார் மதிப்பார்கள்?” என்று கேட்டார். இது தான் அரசியலில் முதல் பாடம் என்று தெரிந்து கொண்ட மகன், “அப்பனாக இருந்தாலும் நம்பக் கூடாது! நம்மை நாமே தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று முடிவெடுத்தான்.

அரசியலில் கால் ஊன்ற கருணாநிதி உதவாத காரணத்தால் தான், சொந்த காலில் நிற்பதற்காக ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது தான் ஜெயலலிதாவின் மறைமுக தாக்கு.

Leave a Reply

Your email address will not be published.