கல்வியா? கடவுளா? மாணவரின் ஆச்சரிய முடிவு
அகமதாபாத்
குஜராத் மாநிலத்தில் ஒரு மாணவர், 12ஆம் வகுப்பில் 99.9% மதிப்பெண் பெற்றும் சமணத்துறவியாகி கடவுள் சேவை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலரும் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்யப் போவதாக பேட்டி அளிப்பதை நம்மூர் தினசரிகளில், ஒவ்வொரு தேர்வு முடிவிலும் பார்ப்போம்.
ஆனால் அகமதாபாத்தை சேர்ந்த 17 வயதான வர்ஷில் ஷாவின் ஆசையோ சமணத்துறவியாகி கடவுள் சேவை செய்வதாகும்.
அவர் இந்த வருடம் 12 ஆம் வகுப்பில் 99.9% மதிப்பெண் பெற்றிருக்கிறார்.
வர்ஷிலின் தாய் தந்தை இருவரும் வருமானவரித்துறையில் பணி புரிகிறார்கள்.
அவர்கள் வர்ஷிலின் இந்த முடிவை வரவேற்கிறார்கள்.
அவர்களின் குடும்பமே ஒரு கட்டுப்பாடான சமணக் குடும்பம்
மின்சாரம் தயாரிக்கும் உலையில் பல உயிரினங்கள் மரணம் அடையும் வாய்ப்பு உள்ளதால் அவர்கள் வீட்டில் மின்சாரம் என்பதே வெகு நாட்களுக்கு இல்லை,
மிக அத்தியாவசிய தேவைக்கான பொருட்களுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
வர்ஷில் தனது முடிவைப் பற்றி கூறுகையில், தனது குருவான ரத்தினவிஜய் சூரி (வயது 32), தன்னைப் போலவே இளமையில் துறவியானவர் என்றும் அவருடைய வழிகாட்டுதலின் பேரிலேயே தனக்கு துறவியாகும் எண்ணம் வலுப்பெற்றது எனவும் கூறுகிறார்.
விரைவில் சன்னியாசம் பெறப் போகும் வர்ஷில் அதன் பின் மூன்று வருடங்கள் மூத்த துறவிகளின் மேற்பார்வையில் ஆன்மீகக் கல்வி பெறுவார்,
வர்ஷிலின் மூத்த சகோதரியும் காஸ்ட் அக்கவுண்டன்சியில் 99.9% மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது